மலட்டுக் குறிகள்


மின்மினிப் பூச்சிகள் மிகுந்த அடர்வானின்
பச்சை வெளிச்சத்தில்
கூடல்ஒன்று நிகழவிருந்தது.
முன்னர் நிகழ்ந்தவை எல்லாம்
வெம்மையைக் கிளறிவிட்டுப் போகும்
பருவம் தப்பிய மழையின்
சாயலுடையதாகவே இருந்தன.
பருவச் சாற்றில் அரும்பிய மலரென
அவனுடல் மேலெழும்பி நுரைக்கிறது.
மகரந்த நெடி பரவியிருந்த
அவன் தேகம்
வெளுத்த பாளையாய் வசீகரிக்கிறது.
சுழலும் காற்றாடியைப் போல்
எனக்குள் அவனைச் சுழற்றத் தொடங்கினேன்
இறக்கைகளை இழந்து
புள்ளியில் மறைய ஆரம்பித்தோம்
காற்றாடி
வெளியின் நிறத்தொடு கட்டுண்டிருந்தது.
கூடலின் முதல் விதியை
அவனது உடல்குளத்தில் துவக்கினேன்
அவன் திகைத்து விலகி
ஏழுகடல் தாண்டி மரமொன்றின் உச்சியில்
மாட்டியிருந்த மலட்டுக் குறியை
எடுத்துவரக் கிளம்பினான்
பின் எப்போதும் அவன் வரவில்லை.

-சுகிர்தராணி

தோழிமார் நிலம்


ஊடல் நிலமெங்கும்
வளவி ஒலி சிதறக்
கொடியிலிருந்து உதிரும் மண்ணில்

நிலத்திற்குரிய தேவதைகளில்
ஒருத்தியாகிய உன் வாசமும்
காடெங்கும் கடலை வாசமும்
நிறைந்திருக்கும்

அந்தி சிவக்கும் வரை
தோழிமார் கதைகளில்
நீயும் கதை சொல்வாய்

உப்பு பூத்த உன் கழுத்து வியர்வை
என் உணர்நீட்சியில் சுவைநீட்சியின்மீது
தாகத்தை ஏவி விடும்
கறுத்த உன்உடம்பு கரிக்கும்

ஆய்ந்து முடித்து
பெண்டுகளோடு நீ சென்ற பிறகு

குறுக்கொடிய நீ
அமர்ந்த இடத்திற்கு வந்து பார்ப்பேன்

எனக்காகவே இனிக்கும் பிஞ்சுகளும்
உரித்துத் தின்ற கடலைத்தொளும்புகளும்
மிஞ்சிக் கிடக்கும்.

-மௌனன் "காலச்சுவடு"

இரவுகளைப் புணர்ந்து திரியும் கள்ளத்தனமான விலங்கு


இரவுகளைப் புணர்ந்து திரியும்
கள்ளத்தனமான விலங்கினைப் போல
மிகவும் மோசமானவளாக அறியப்படுகிறேன்.
இரண்டாகக் கிழிதலுற்ற என் முகம்
சலனமடங்கிய யுத்த களத்தின்
கந்தலாடையாய் நசிந்திருக்கிறது.
பருவ நாணில் பூட்டப்பட்ட என் குரல்
ரணங்களை மென்று விழுங்கிய
துயரத்தின் ஒலியொடு பயணிக்கிறது.
காம்பிலிருந்து விடுபட்டு
வெடித்துச் சிதறும் துரியன் பழங்களென
நாற்றமெடுக்கின்றன வார்த்தைகள்.
எரிமலையின் நெருப்புக் குழம்பு
இறுகிக் கிடக்கும் கோர வடுவாய்க்
குவிந்திருக்கிறது என் தேகம்
வழக்கொழிந்த வரைபடத்தில்
உறைந்த இரத்தத்தின் மீது
படிந்திருக்கிறது என் இருப்பிடம்
வெயில் வீசும் செங்குத்தான மலைச் சரிவில்
உன்னோடு பகிரவென்றே
செதுக்கப்பட்டிருக்கிறது
என் கற்படுக்கை
என்றாலுங்கூட
என் யோனி மயிர்கள்
வளர்ந்துகொண்டுதானிருக்கின்றன.

-சுகிர்தராணி

சுய ரகசிங்கள்


இரகசியங்கள்

அதி அற்புதமானவை.

முத்தத்தின் கசந்த போதையோடு

எப்போதும் என்னிடம்

சேர்ந்துகொண்டே இருக்கின்றன

நிபந்தனைகள் ஏதுமின்றி

எல்லா இரகசியங்களையும்

எல்லோரிடமும் சொல்லிவிடுகிறேன்

உடலினையும் தருணத்திலரும்பியும்

நீலவியர்வையாய்

ஒளிர ஆரம்பிக்கின்றன அவை.

வலியைச் சுழன்றடிக்கும்

மாதத்தின் இரத்தநாட்களைப் போல்

மீண்டும் சில இரகசியங்கள்

மேலெடாய் படிகின்றன

.என் வண்டல் சமவெளியில்.

உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுமவை

தேமலின் சிவந்த நிறத்தோடு

வெளியேங்கும் சுற்றித் திரிகின்றன

இரகசியங்களெனும் பிரக்ஞையற்று.

ஆனாலும்

விரிசலுற்ற மனத்தாழிக்குள்

ஒளிந்து கிடக்கின்றன

ஓராயிரம் சுயரகசிங்கள்.
-சுகிர்தராணி

புரட்சியும் புண்ணாக்கும் ஏகாதிபத்தியமும்.


விடைதெரியா

கேள்விகளாய்

என் வீடுதேடி வந்த

இரண்டு செஞ்சட்டை

தோழர்கள் போட்டுக்

கொடுத்த ப்ரூ காபியையும்

எடுத்துக் கொடுத்த

இரண்டு ஃபைவ் ஸ்டார்

சாக்குலேட்டுகளையும்

நாக்கில் எச்சிலும்

கண்களில் புரட்சியும்

மின்ன கடைவாய்

பற்களின் சொத்தையில்

சிக்கிவிடாமல் சுவைத்து

உண்ட படி
அமெரிக்க ஏகாதிபத்தியம்

பற்றி பேசியபடியே

குடிதாங்கிக்கும் கொட்டை

தாங்கிக்கும் வித்தியாசம்

தெரியாமல்

தலைவனின் பூனூல்

செஞ்சட்டையை மீறி

தன்முகம் காட்ட வெளியே

பீறிட்டு கிளம்புவதை

கண்டு கால்களில்

மூத்திரம்

ஒழுக அமெரிக்க

ஏகாதிபத்தியம்

ஒழிக

பார்ப்பன ஏகாதிபத்தியம்

ஒழிக

மாமா ஒழிக

என்று கோஷம்

போட்டபடியும்

வேட்டியைக் கூட

எடுக்காமல் ஓடியதில்

கழனித் தொட்டியில்

புண்ணாக்கு

மென்றுகொண்டிருந்த

என்வீட்டு எறுமை

இரண்டு

நாளாய்

பால்கறக்கவில்லை

அகலிகையின் யோனி


ரம்பை ஊர்வசி

இந்திராணி

அந்தப்புரத்தை அலங்கரிக்கும்

ஆயிரம் தேவதைகள்

இருந்தும் கூட

எப்போதும் அகலிகைளின்

அல்குல் தேடி

அலைகிறது

தேவலோகத்து

இந்திரனின் வஜ்ராயுதம்


கிழிந்த யோனிகளுள்

பிணமாக மல்லாந்து கிடக்கும்

மண்ணின் வேர்களைப் பிழிந்து

தாகம் தீர்த்துக் கொள்கின்றன

இந்திரனின் வெள்ளை யானைகள்

கல்லாக இருக்கும் போது

காதலாகி கசிந்துருகிய

அகலிகையின் முலைப்பாலிருந்து

விஷம் கலந்து வடிகிறது

சாபவிமோசனம் கொடுத்தவனைச்

சாகடிக்கும் நாட்களுக்காய்

காத்திருக்கிறது

மனித வெடிகுண்டுகளைப்

பிரசவிக்கும்

அகலிகையின் யோனி.


-புதிய மாதவி

பதினான்கு அம்புகள்


பச்சைக் கள்ளியின் பழநிறத்தில்

கனன்று எரிகிறது தீ

அடர்வனத்தின் மர்மப் புன்னகை

பெருங்காற்றாய்ச் சூழ்ந்து நிற்க

மிகுந்த குலவைச் சத்தங்களும்

துந்துபிகளின் பேரொலியும்

நீராவியைப் போல பரவி மிதக்கின்றன

கடல் சூழ்ந்த நிலத்திலிருந்து

மீட்டுக் கொணர்ந்த என்னை

நெருப்பின் விளிம்பில் நிறுத்துகிறார்கள்

பூக்களால்அலங்கரிக்கப்பட்ட சிவிகையும்

மென்மையாக்கப்பட்ட பாதக் குறடுகளும்

எனக்காகக் காத்திருக்கின்றன

தீயிலிறங்கிக் கரையேறச் சொல்லும்

வில்லேந்திய அவனிடம்

என்னைச் சிறையிட்டவனோடு

செம்மரக் கட்டிலில் சயனித்ததை

இதழ்பிரித்து விளம்புகின்றேன்

காப்புடைத்த என் யோனியிலிருந்து

வெளியேறுகின்றன பதினான்கு அம்புகளும்

பெருந்தீயை அணைக்கப் போதுமான

ஒரு குவளை இரத்தமும்.


-சுகிர்த ராணி