புனைவுகள்


ஒரு மாயக்காரனின் கையுயர்த்தலில்
சடக்கென முகிழ்க்கும் மஞ்சரியாய்
நரம்புகள் புடைத்தயென் கைகளில் குவிகின்றன
என்னைப் பற்றிய புனைகதைகள்
தீ அசையும் ஒளியில்
அசாதரணமாய் புரட்டிப் பார்க்கிறேன்
நீர்த்தாவரங்கள் மல்கிய குளத்தின்
குறுக்கலையென
புனைவுகளில் பரவுகிறதென் பிம்பம்.
பருவ திரவத்தில் தோயாத என்னுடல்
அரும்பி அரும்பிப் பின்பூத்திருந்தது
உடல்கள் கிடத்தப்பட்டிருந்த அறையில்
உறக்கத்தைக் கலைத்த கூடலோசையால்
வேர்விட்டுக் கிளைத்தயென் ரகசிய இரவுகள்
சொல்லப் பட்டிருந்தன
இருளின் அரங்கத்தில்
தானே புணரும் சாகஸநிகழ்வு
ஒற்றைக்காலில் நிறுத்தப்பட்டிருந்தது
காமவாசனை வீசும் தோழியின் தேகத்தில்
இலவம் பஞ்சடைத்த படுக்கையின் வளைவுகளென
புதைந்திருந்தது சுட்டப்பட்டது
புனைவுகள் எப்போதும்
உப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன
அவைதான் வாழ்க்கையை மலர்த்துகின்றன
இந்தக் கவிதையையும்.

- சுகிர்தராணி