இது கதையல்ல

நான் அப்போ மெட்ராஸிலே மெக்கானிகல் எஞ்ஜினியரிங் டிப்ளமோ சேந்த புதுசு, வடபழனி கவுரிசித்ரா கார்டன் இருக்கில்லே? அதாங்க அந்த வடபழனி பஸ்டான்ட் ஓரமா? ஆற்காட் ரோட்டிலே ஏவிஎம்முக்கு எதுத்த மாதிரி அதுலே ரெண்டாவது மாடில நான் எங்க மாமா குடும்பத்தோட தங்கியிருந்தேன். அப்ப நான் மெட்ராஸுக்கு புதுசுன்னாலும் சும்மா இருக்க நேரம் சென்னைய சுத்தி பாப்பமுன்னு கிளம்பிடுவேன். நான்(ங்க)தங்கியிருந்த ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டில அவங்க தங்கியிருந்தாங்க. யாருன்னா அவங்களும் அவங்க தோழியும்.

ரெண்டு பேருமே டாக்டர் ஆவறதே எங்களோட லட்சியம்னு படிச்சி என்ட்ரன்ஸ் மார்க் எடுத்து எப்படியோ காசையும் கொஞ்சம் குடுத்து மெடிக்கல் காலேசில சீட்ட வாங்கி போட்டாங்க ஆனாலும் அவங்க கொஞ்சம் துனிச்சலான பொண்ணுங்கதான். தனியா வீடு எடுத்து அங்கன போக வர காலேசிக்கு ஒரு கைனடிக் ஓன்டாவும் அவங்க அம்மா வாங்கி தந்துட்டாங்க (பாவம் அவங்க அப்பா சின்ன புள்ளையா இருக்கும் போதே போய்சேந்துட்டாராம்)

நான் முன்னமே சொன்ன மாதிரி இந்த இங்கிலிபீசு பாட்டுலாம் கொஞ்சம் கொஞ்சம் கேப்பனுங்க. அதை ஒரு நா ஆரும் ஊட்டுல இல்லாதப்ப நல்ல சத்தமா வச்சி, நம்ம பின்னால தெரு பசங்கதான் கீழவா கீழவான்னு பாடிக்கிட்டிருந்தாங்க. திடீர்னு கதவ தட்டுற சத்தம் கேட்டதுங்க என்னடா இது சத்தமுன்னு கதவ தொறந்தா அவங்க நின்னுகிட்டு இருக்காங்க . நம்ம வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் நடுவில ஒரு சின்ன இடைவெளிதான் லிப்டுக்கு அதனால அவங்களுக்கு சங்கடம் போல நம்ம இனிமே சத்தமா பாட்டு போடக்கூடாதுன்னு என்ன? ங்கன்ற மாதிரிபாத்தனுங்க. அவங்க எக்ஸ்யூஸ்மி அந்த பாட்ட கொஞ்சம் சத்தமா வக்க முடியுமான்னு கேட்டாங்க.... நீங்களே சொல்லுங்க புலின்னு நெனைசு எட்ட போனா ஒரு பூவால்ல இருக்கு .

சரிங்கன்னு சொல்லிட்டு நான் போயி அந்த பொட்டீல எம்புட்டு வக்க முடியுமோ அம்புட்டு சத்தம் வச்சனுங்க.. அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. நானும் கதவை சாத்திகிட்டு ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க போனா திருப்பி டம்மு டம்முன்னு சத்தம் அவங்கதான் மறுபடியும் வந்து என்னங்க உங்க அக்காதான் ஊருக்கு போயிட்டாங்களே எங்க சாப்பிடுவீங்கன்னு கேட்டாங்க, நான் கடையில சேலம் ஆர் ஆர் என்வி ல சாப்பிடுவேன் இல்லன்னா அங்கன பக்கத்தில ஒரு சரவணபவன் இருக்கில அதுல சாப்பிடுவேன்ன்னு சொன்னனா அதெல்லாம் வேண்டாம்ங்க உங்க அக்கா வற்ற வரைக்கும் நீங்க இங்கயே சாப்பிடலாம் ஒன்னும் கூச்சப் பட வேண்டாம்னு சொன்னாங்க.
நானும் ஒரு தயக்கத்தோட சரிங்கன்னு சொல்லிட்டு வரங்க நீங்க போங்கன்னு சொல்லி அனுப்பிட்டேன். ஒரு நல்ல பாட்ட எடுத்து சத்தமா வச்சிட்டு போயி சாப்பிடப் போனா அங்க அவங்க பிரண்டும் இருந்தாங்க.
அவங்க சொன்னாங்க கயல் ஏம்பா அதுக்குள்ள கூட்டியாந்த
இன்னமும் ரெடிபன்னலியேன்னு சொன்னாங்க. ஆகா இன்னைக்கு நாம தான் சமைக்கனுமா இல்லை வெறுந் தண்ணிதானானு நெனைச்சி ஒரு ஓரமா கெடந்த சேரத் தூக்கி போட்டு ஒக்காரப் போனனுங்க. அதுக்கு கயல் அவர வேனும்னா போயிட்டு அப்புறமா அழைச்சிட்டு வாயேன் நான் அதுக்குள்ள சமையல
ரெடிபன்னி வக்கிறேன்னு சொல்லுச்சிங்க. நானும் இதுக்கு மேல இருந்தா அந்த புள்ள நம்மல ஜன்னல் வழியா தூக்கி பஸ்டாண்டு பணிமனைல போட்டுடும் போல கெளம்பி நாம கடைல சாப்பிட்டுக்கலாம்ம்னு போனேன். அங்க போனா சேலம், சரவணா எல்லாம் கூட்டம், சரின்னு ஒரு 100 ரூபா காசிருந்துது ஒரு பீர் சாப்பிட்டு அப்புறமா சாப்பிடலாமுன்னு ஏவிஎம் உருண்டைக்கு
நேரா ஒரு ஒயின்சாப்பும் ஒரு பரோட்டாகடையும் இருக்கு அதுல போயி உக்காந்து ஒரு பீர் ஆர்டர் பன்னுனனுங்க.
நான் உள்ள ஒக்காந்திருந்தனுங்க இதுங்க ரெண்டும் வேகமா வண்டீல ஆற்காடு ரோட்டிலே போரூர் நோக்கி போகுதுங்க .... எங்கடா இந்த நேரத்துக்குன்னு நான் வெளிய வந்து பாத்தனா அங்கன பானுமதிம்மா ஆஸ்பிட்டலுக்கு ஆப்போசிட்டுல ஒரு ஐயர் ஓட்டல் இருக்குமே? பேரு ஞாபகமில்லை அங்க போயி நிக்குதுங்க கயல் வெளியவே இருக்கு சசி மட்டும் உள்ள போயி ஒரு பார்சலோட வருது. எனக்கு அப்பத்தான் தெரிஞ்சது ஆகா இதுதான் சமைக்கறதா இதுக்கு நான் கடையிலயே சாப்பிட்டுக்குவேனேன்னு மனசுல நினைச்சுகிட்டு பீரக் குடிக்க உள்ள போயிட்டேன்.
ஒன்ன முடிச்சு ரெண்டு பரொட்டாவ உள்ள தள்ளி நேரா வீட்டுக்கு போனேன் அங்க பாத்தா இது ரெண்டும் வாசல்ல நிக்குது எங்க போனீங்க சமைச்சு வச்சுட்டு தேடிப் பாத்தோம்னு கேட்டாங்க அடிப் பாவிகளா கடச்சாப்பாடு, வீட்டுச்சாப்பாடு விதியாசம் தெரிஞ்ச புருசன் வந்தா என்ன ஆகும்னு நெனச்சி இல்லைங்க எனக்கு பசி அதிகமா தாங்க முடியாது அதனால கடைல சாப்பிட்டு வந்தேன்னு சொல்லி ஒரு பீரேப்பத்த உட்டு
கதவதொறந்து உள்ள போனா அதுங்க வந்து கொஞ்சமா சாப்பிடுங்கன்னு சொன்னாங்க.
என்னடா இது புலிவால புடிச்ச கதையாச்சேன்னு சரி ஒரு கை சாப்டா அவஙக் மனசும் திருப்தி நமக்கும் நிம்மதின்னு போயி உக்காந்தா எல்லாத்தையும் அதுக்குள்ள கிச்சன்ல இருந்து கொண்டுவர மாதிரி கொண்டு வந்தாங்க. நானும் சிரிச்சுகிட்டே சாப்பிட்டு இந்த மாதிரி சாப்பாட்ட நான் இதுக்கு முன்ன (அந்த ஓட்டலோட பேரச் சொல்லி) அங்கதாங்க சாப்பிட்டிருக்கென்னு சொன்னேன்.... நல்ல வேளையா அவங்க மொகத்த பாக்கலை. கைய கழுவிகிட்டு நான் வீடுக்கு வந்தாச்சு. இது மாதிரியே நானும் கூப்பிடும் போதெல்லாம் சாப்பிட போவானா அதுவே நல்ல பழக்கமாச்சு.
அவங்க நம்ம வீடுக்கு வரபோக இருப்பாங்க. அக்காவும் பிரசவத்துக்கு ஊருக்கு போனவங்க வரலையா நானும் ஊருக்கு போக முடியலை. ஓசில சாப்பிட்டு காலேஜு செந்தில் கம்பெனி ன்னு ஜாலியா போச்சு ஒரு மூனு மாசம்.

ஒருநாளு காலையில வந்து கதவ தட்டி ஒனக்கு ஊரில எதும் பொண்ணு பாத்து வச்சிருக்காங்களான்னு சசி கேட்டுது. இதென்னடா எதோ நானா போயிட்டுருக்கவனை கூப்பிட்டு
தானா கேட்டா என்ன சொல்ல இல்லிங்கன்னு ஒரு பொய்ய சொன்னதுக்கு சரிங்கன்னு போச்சுது சசி.

நமக்கு யாருன்னுதான் ஊருக்கே தெரியுமே இவங்கள்ட பொய் சொன்னா தப்பில்லேன்னு சமாதனமாயி கண்டுக்காம விட்டாச்சு. நாங்க அதுக்குள்ள நல்லா பிரண்டாயிட்டோம். மொத மொதலா அப்ப நம்ம ஜான் டிரவோல்டா நடிச்ச ப்ரோகன் ஏரோ ராஜேஸ்வரில ஓடுச்சு அதப் பாக்க மூனு பேரும் போனமா. அங்க வச்சு கயல் சொல்லுச்சு எங்க வீட்டில மாப்பிள பாக்கறாங்கன்னு ஆகா நமகு இது ஏதோ ஆகாத விசயமாச்சேன்னு சரிங்க நீங்க என்ன சொன்னீங்கன்னு கேட்டதுக்கு நான் என்ன சொல்ல எல்லாம் அம்மாவோட முடிவுன்னு சொல்லிட்டு அதுக்கு நீங்க என்னய பொன்னு கேப்பீங்களான்னு கேட்டுது. இதையெல்லாம் பக்கத்துல ஒக்காந்து கேட்ட சசி ஒரே சிரிப்பா சிரிக்குது. எல்லா பயலும் அன்னைக்கு எங்களைத்தான் பாத்தான் .

சரி எதுவா இருந்தாலும் வீட்டுல போயி பேசிக்கலம்னு சொல்லிட்டு படத்த பாத்தா அது ஒன்னும் தெரியலை எம் பொண்டாட்டி ஞாபகம்தான் வருது. அடியே முதல்லயே கயலுகிட்ட எல்லாத்தையும் சொல்லிருந்தா இம்மாதூரம் ஆகாதேன்னு வருத்தத்தோட படம் முடிஞ்சு வெளிய வந்தா சசி இன்ன்மும் சிரிக்குது. என்னடா ஆச்சு இந்த புள்ளைக்குன்னு நானும் பல குழப்பத்தோட வீட்டுக்கு வந்தோம்.
சாப்பிடும் போது சொல்லுது என்ன சொல்றீங்கனு. நான என்ன சொல்ல எங்கதைய எடுத்து உட்டதுக்கு இதை யேன் முன்னமே சொல்லலைன்னு கேட்டுது சசி...... நான் அப்படி எதுவும் நினைக்கல அதானால சொல்லலைன்னு சொன்னதுக்கு சரி இதோட இது இருக்கட்டும் நீங்க எப்பவும் போல பெசுங்க இல்லன்னா கயல் மனசு கஷ்டப்படும்னு சொல்லுது. சரின்னு நானும் எப்பவும் போல இருந்தும் எம் மனசுல அப்ப அப்ப கல்லு விழுது. குட்டை கொழம்புது.

அவங்கள பத்தி எங்காளுகிட்டயும் நான் சொன்னதுக்கு அப்பிடி ஏதும் ஆசையிருந்தா அவங்கள்யே கட்டிக்கோங்க நான் கண்டுக்காம உங்கள மாதிரி ஒரு இளிச்ச வாயன் கிடைச்சா
கட்டிக்கிறேன்னு சொல்லுது. கயல் கல்லதூக்கி போட்டுதுன்னா எங்காளு அனுகுண்டே போடுது.

மத்தளம் என்ன மத்தளம் அதுக்கு பேரை எம்பேரா வைக்கலாம். ஆனாலும் எனக்கு மனசு கேக்காம எந்த முடிவும் எடுக்கலை. சரின்னு இருக்கும் போது ஒருநா அவங்க வண்டி ரிப்பேரு
நான் மாமாவோட வண்டிய எடுத்துகிட்டு வெளிய போறதுக்கு கிளம்பினேன் அவங்க வந்து இதப் பாத்து சரிபன்னிக் கொடுங்க மெக்கானிக்குனு நக்கலா சொன்னாங்க.
இந்த விஷயம் நடந்த பிறகு நான் சரியா அவங்க கூட முன்ன மாதிரி பேசரதில்லை சரின்னு பஜாஜ ஒதைக்கிர மாதிரி கைனடிக்க ஒதைக்க கிக்கர் காலோட கழண்டுகிச்சு. போச்சுடான்னு பாத்தா அவங்க ஒரு லுக்கு வுட்டாஙக் பாருங்க எஞ் சென்மத்துக்கும் மறக்காது.
உள்ள இருக்க குரங்கு ஒம்போது மரம் தாவுது நானும் ஒன்னும் பேசாம அதை எடுத்து முன்னால வச்சி வண்டி செட்டுக்கு போகனும் நீங்க ஒரு ரெண்டுநா பஸ்ஸுல போங்கன்னு சொன்னதுக்கு என்ன இன்னிக்கு கொண்டாந்து உடுன்னு சொனாங்க. நா எங்க பார்க் டவுன் வந்து அப்புறமா கோடம்பாக்கம் வாரது இன்னிக்கு கட்டுடா மாப்ப்ளன்னு நெனைச்சுகிட்டே (உள்ள வேறையா மரமெல்லாம் ஆடுது) வண்டிய எடுத்தா அது பின்னால ஏறிகிட்டு சரி போங்கன்னுது. அந்த ரோடு போட்ட காண்ட்ராட்டர எத்தனை நாள் திட்டிருப்பனோ இன்னிக்கு மட்டும் திட்டவே யில்லை.
அவங்க அன்னிக்கு போனதுக்கு பிறகு நான் வந்து தனியா ஒக்காந்து ஓசனை பன்னி பாத்தேன். சரி நம்மளுக்கு நம்மாளுதான் சரி இவங்கள சரிபன்ன நம்மாளையும் இவங்களையும் அறிமுகப் படுத்தி விட்டா மேட்டர் காலின்னு ஒரு நாலுநாள் லீவு போட்டு ஊருக்கு அழைச்சுகிட்டு போனேன், எங்க வீட்டில எங்க அக்கா அப்பா எல்லாருக்கும் இது முன்னமே எங்காளு சொல்லிடுத்து போல யாரும் எதுவும் கேக்கலை
எங்காளு வீட்டில கொண்டுபோயி அறிமுகப் படுத்தி வச்சேன்ங்க. ஒரு நாலு நாளும் பேசுனாங்க பேசுனாங்க அப்பிடி பேசுனாங்க என்னா பேசுனாங்கன்னு நான் கேக்கவேயில்லை. சரி ஊருக்கு போகலாமுன்னு கிளம்பியாச்சு . இது ரெண்டும் ஒன்ன ஒன்னு கட்டிகிட்டு அழுவுதுங்க. என்னான்னு கேட்டா பிரிய கஷ்டமா இருக்குதாம்.

நாலு நாளைக்குள்ள அப்ப்டி என்ன நட்போ. சரின்னு சென்னை வந்ததும் அவங்க இயல்பா ஆயிட்டாங்க .... நானும்தான் அதுக்கப்புறம் ஆச்சு 2 வருஷம் நான் ஊருக்கு வந்து அவங்க
ரெண்டுபேரை கொன்னு டாக்டராயி, எங்கல்யாணத்துக்கு கூப்பிடப் போனப்போ அவங்க கல்யாணம் முடிஞ்சு போயிருந்துது.
என்னடான்னு கேட்டா லவ்வாம் அவரும் டாக்டர்தான் ஆனா பெங்களூர் . இப்ப செங்கல்பட்டிலயே இருக்காங்க. கண்டதும் காதல் கல்யாணத்துக்கு கூப்பிட முடியலைன்னு வருத்தப் பட்டாரு அப்பதான் அவரு சொன்னாரு நீங்க தப்பிச்சிகிட்டீங்கன்னு சொன்னாரு

என்னான்னு கேட்டதுக்கு ஓட்டல் சாப்பாடு அவருக்கு ஒத்துக்கலையாம். அட எல்லா கதயும் சொல்லியாச்சான்னு கேட்டதுக்கு இந்த கதைய சொல்லித்தான் லவ்வே ஆச்சுன்னார். எங்க கல்யாணத்துக்கு ரெண்டு பேரும் ஒரு வாரத்துக்கு முன்னமே வந்தாங்க எல்லா வேலையும் எடுத்து செஞ்சாங்க, அதுக்கு பிறகு அவங்க வீடுக்கு தான் முதல் தேவைக்கே போனோம்.
என் மனைவியும் கயலும் நல்ல நெருக்கமான தோழிகளாயிட்டங்க. அதுக்கு பிறகு என் மகன் பிறந்தப்போ வந்து அவங்க ஒருமாசம் எஙக கூடவே இருந்தாங்க.எனக்கு இதையெல்லாம் நினைச்சா எதுக்கு அவங்களை பாத்தோம் அவங்க எதுக்கு என்னை கட்டிக்க விரும்பினாங்க அப்புறமா எப்படி சமாதானமானாங்க, எதுவுமே தெரியலை.
கேட்டதுக்கும் சொல்லலை.

அவங்களுக்கு இப்ப ஒரு பொண்ணு இருக்கு .. இந்த சொந்தம் எனக்கு இன்னும் புடிச்சிருக்கு கல்யாணம் பன்னீருந்தா கூட இப்படி நட்போட இருந்திருப்பாமான்னு தெரியலை. அவரும் ரொம்ப நல்லவர்.

எந்த தப்பான என்ணமும் இல்லாம பேசுவாரு இன்னமும் நான் போன் பன்னலைன்னா கூட அவரு போனடிச்சு எப்ப ஊருக்குன்னு கேப்பாரு.
இதையெல்லாம் அவங்க படிச்சா சந்தோஷப் படுவாங்க

(இச் சம்பவம் நிறைய உண்மைகளும் கொஞ்சமாய் வார்த்தைகளும் கலந்தது 1996- 1999 + இன்று வரை)












நாளை AUG-15 மற்றுமொறு நாளே


Photobucket - Video and Image Hosting



வழக்கம் போல
கோயிலுக்குள்
நுழைய முடியாத,
பொதுக் குளத்தில்,
நீரருந்த
பொது இடத்தில்
டீ குடிக்க
காலிலே செருப்பனிய
காதலில் சாதிபார்க்க
நீதியில் பூனூல் பார்க்க
எல்லா வழிகளிலும்
இருக்கும் ஓட்டைகளை
எது வழியே சென்றால்
தப்பிக்கலாம் எனத்
தெரியாத உனக்கும்...

இருப்பது சிலபேர்தான்
யாம் சொன்னதே சட்டமாகும்
அர்ச்சகர் யாமே அன்றோ
நீ அதுபுறம் தள்ளிப் போவீர்
எப்புறம் சென்றாலும்
யாம் இச்சைகள் தவிற்க மாட்டோம்
நீசனின் பாஷை பேசும்
நீபேசவோ சாதி பற்றி
ஈசனும் எங்கள் சொத்து
அதை பேசுவோம்
நாங்கள் மட்டும்
மனு நீதி மட்டும் போதும்
இபிகோ எதற்கு என்னும்
சில பேடிகள் இருக்கும்
மட்டும்
உனக்கு
நாளை
மற்றுமொரு நாளே



கண்ணஞ்சல்


சொல்ல மறுக்கும் உன்சின்ன மவுனத்துக்கு நடுவில்
என் சிறு சிரிப்பை பலிகொண்டாய்
ஊடல் என்று ஒதுக்கவும் முடியாமல்
கோபம் என்று கோபிக்கவும் இயலாமல்
இரண்டுக்கும் நடுவில் என்னை
இம்சை செய்கிறாய்
மிகப் பிடிவாதமாய்.

உன் உள்ளே இருக்கும் ஒரு
கண(ன)ப் பார்வை என்னை
இன்னும் கொஞ்சம் லேசாக்குமென்றால்
இம் மவுனத்தை இப்படியே தொடர்க
இறுதியில் சொல்ல ஏதேனும் வழியிருந்தால்
எனக்கொரு கண்ணஞ்சல் அனுப்பு

இரங்கற்பா


கருகிய அந்தமுகத்துக்கு
தெரியாது நான்
யாரென்று

கருகும் முன் நான்
பார்த்திருந்தாலும் அது
தெரிந்துகொண்டிருக்காது
என் எல்லா நாட்களைப் போல
இதுவும் ஒரு நாள்

இங்கே நான் எழுதுவது "அதைப்"பற்றி
என்றும் அறியாது
அதுவும் இதற்க்காகவே காத்திருக்கக் கூடும்
என்னைப் போல

என்றாவது ஒரு நாள்
எனக்கும் வரும்வேளை
அப்போது வேறு யாராவது
எழுதக்கடவது இதேபோல்
கருகிய சவக்களை வீசும்
என் முகத்தைபார்த்து



நான் நீ


நீ
ஒவ்வொறு முறையும்
என் வீட்டைக் கடக்கையில்
எதையாவது
தொலைத்துவிட்டே
போகிறாயோ என்று
எனக்கு சந்தேகமாய்
இருக்கிறது
இல்லையென்றால்
என் தின்னையை கொஞ்சம்
திரும்பிப் பார்
தொலைத்த நான்
துவண்டு கிடப்பதை

பொடியன்

நான் பொடியந்தான்
கொஞ்சம் தன்மானமுள்ள
தமிழ் பொடியன்
பொடியன் என்ற சொல்
யாருக்கென்று
புலிகளுக்கு தெரியும்
புல்லுருவிகளுக்கல்ல
நான் இந்த சாதியென்று
நீ சொல்லும் வேளையில்
சொல்லாமல் தெரியும் உன்
சாதியும்அதிலிருக்கும்
ஆணவமும் வெட்டிய
மரங்களும்மனிதமும்
ஒன்றாய் கணக்கெடுக்கும்
கோமானே
யாம்
நட்ட மரங்களை எண்ணிப்பார்
அதுசொல்லும்
எந்தன் உயிர்ப்பை
தமிழும் தமிழனும் திராவிடமும்
வேறு வேறென்றுபுலம்மும்
உன்போன்ற சில ....
அதுவல்ல என்வேலை
எனக்குண்டு ஆயிரம் பணிகள்
அதில் கொஞ்சமேனும்
சிந்திக்கஒதுக்குவதுண்டு
எதையும் உம்போல்
பிடுங்கவல்ல
எழுதியது என்னவென்று
விளங்காவிடின்முதலில்படி
அதைப் புரியவும் கற்றுக்கொள்
நான் பொடியன் என்றுஎனக்கும்
நினைவூட்டிய உன்அன்புக்கு
நன்றி
கொலையென்ன அதன்
விலையென்ன வென்று
எமக்கும் தெரியும்
எம் இனத்தைவிட
எவனோ பெரியவன் என
பிதற்றும் உனக்குகாலம்
பதில் சொல்லும்
ஆனால் கடினமாய்
எனை எதிர்க்க வேண்டுமெனில்
எழுதெனக்கு இனமிழுத்து
எழுதுவது எரியும்
நெருப்பு
எழுதுகிறேன் பின்னால்

இன்று எங்களின் திருமண நாள்

இக் கவிதை என் மனைவிக்கு
இன்று எங்களின் திருமண நாள்
05-07- 2002
இதே போலொறு நாளில் தான் என் + என் திருமணம் நிகழ்ந்தேரியது இது நான்காம் வருடம்

இன்னும்
எத்தனை காலம்
உன்னுடன் உன்னில்
கலைந்து கரைந்து
கிடக்கப் போகிறேன்
என்பதறியேன்
ஆனால்
உனை பிரிந்த
இந்த
சிறு இடைவெளி என் உன்
இடையே இன்னும்
நெருக்கம் தருவது நிஜம்
இன்னும் சில காலம்
நீயில்லாமல் நானும்
நானில்லாமல் நீயும்
தனித்தனியே திருமணவிழாவை
கொண்டாடக் கடவது
அப்போதாவது இன்னும்
நெருங்குவோம்
மனசால்


வாழ்த்திய வாழ்த்தும் அனைவருக்கும் நன்றிகள் பல