FEB 14


சுடும் உண்மை


Photobucket - Video and Image Hosting


ப்ரிய மோகன்

ப்ரிய மோகன்,
நான் உங்களுக்குக் கடிதம்

எழுதுவேன் என்று
எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.
உங்களைக் கடும் விமரிசனம் செய்து

கிண்டலடித்த கூட்டத்தைச்
சேர்ந்தவன் நான்.
இருப்பினும்
நேசக்கரம் நீட்டுவீரெனத்
தெரியும் எனக்கு.
இந்தக் கடிதம்கூட
எழுதியிருக்க மாட்டேன்.
சந்தித்து மன்னிப்புக் கேட்கலாமென்றால்,
உம்மைச் சுற்றியுள்ள
கமாண்டோ படை
தடையாக இருக்கிறது.
எங்காவது பொதுக் கூட்டத்தில்
உம்மைக் கண்ணில் பார்த்துக்
கையசைத்து,
என்னை மறு அறிமுகம்
செய்துகொள்ளலாம் என்றால்
அதற்கும் வழியில்லை.
நீர் என்னைப் பார்க்கிறீரா
இல்லையா
என்று தெரியாத அளவுக்கு
உம் தலையைச் சுற்றி
சூரிய வட்ட ஒளித்தட்டு
ஒன்றைப் பிடித்தபடி
அலைகிறார்கள் உங்கள் பக்தர்கள்.
உங்கள் காதி கமாண்டோக்கள்

இல்லாமல்,
சூரிய வட்டமில்லாமல்,
பழையபடி மகா மனிதனாக
உம்மைச் சந்திக்க வேண்டும்...
எப்படி? தெரியவில்லை.
என்னடா...

இந்தப் பயல் இப்படி ஒரு
விண்ணப்பம் வைக்கிறானே
என்று வியக்காதீர்கள்.

அன்று நான்
உங்களைச் சுட்டது
விவேகமில்லாத கோபத்தில்.
இன்று கோபம் தணிந்து

கை குலுக்க வருகிறேன்.
மறுதலிக்க வேண்டாம்!

உங்கள் நண்பன்
கமல்ஹாசன்.

சயனைடு கவிதை

வாடகைத் தாயின் மார்பில்
அனாதைக் குழந்தைகளாய்
அகதிகள்.

எரிக்கப்பட்ட கூட்டிலிருந்து
இரை தேடி வரும் ரணம் பூசிய
சிறகுகள்.

பனை மரங்கள்
துப்பாக்கிகளாய் வெடிக்க
தேயிலை புகையிலையாய் கசியும்.

சமாதானப் புறாவின்
சவத்தில்
சிவப்புக் கொடி.

கிரிக்கெட் ஆட்டம் நின்றுபோனால்
இன்னொரு நாள்
வைத்துக்கொள்ளலாம்.
கோயிலுக்குள் குண்டு வெடித்தால்
இன்னொரு கடவுள் சிலையை
வாங்கிக்கொள்ளலாம்.
வகுப்பறையில் குண்டு வெடித்தால்
எப்படி முளைக்கவைப்பது
இன்னொரு சீருடைச் செடியை?


ஊரே அழுகிறது
எதற்கு ஊரடங்கு?
ஒரு துளி நிலத்தில்

கடலளவு கல்லறைகள்.
மண்டை ஓடுகள்

எல்லைக் கோட்டை அழிக்கட்டும்.
பிணங்களின் கனவுமெய்ப்பட வேண்டும்.

ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய
தமிழர்கள்
தாய் மண்ணுக்குத் திரும்பும்போது
தேசியகீதம்தாய் மொழியாகட்டும்.

ரத்தத்தில் மூழ்கிய
பேனாவிலிருந்து
துளித் துளியாய்
கரைகிறது

கவிதை.
கபிலன் - ஆனந்த விகடன்

மீண்டும் உனக்கொரு கடிதம்.

சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும் என்ற
காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.
காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்உனக்கல்ல எனினும் இத்துடன்அதையும் இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பதுஅனாசாரமாகாது.

பார்த்துப் புரிந்துகொள்.பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டியஅவசியமில்லை.
அவளுக்கு ஆர்வமும்இருக்க வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பதுஉண்மை.

ஆள் மாறினாலும்இல்லாள் மாறினாலும்
காதல்மாறுவதில்லை.
கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்

இருவேறு நிலைகள்.அவள் என்னவள்
அவன் என்னவன் எனஅறம் என்ற பெயரால்
அடையாளச்சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.
நமது ஆறாவது உணர்வைபோற்று.

பண்டிதர்கள் மெதுவாகஉறுதியான மற்றஐந்து உணர்வுகளின்உத்வேகம் குறைந்து வருவதைஉணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்என் (நம்) காதலும் சிக்குண்டுதவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள் சமிக்ஞை செய்து

கவிதையை வைக்கிறார்கள்.
நான் காதலன் கவிஞன் ஆதலால்

காதலால் மீண்டும்உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல்

விட்டிருப்பதுவிபத்தல்ல நீ
விலாசத்தை மாற்றிக்கொண்டே
யிருக்கிறாய் நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!


-கமல்ஹாசன்

நாபிக்கொடி


அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி
சோதரி பல்முகி பாதகி


-கமல்ஹாசன்

KAMAL HASSAN


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்

நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.
எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,எவ்வழி எனத் தெரியாமலே எமை
நடத்திச் செல்லப் பணிந்தோம் உன்னை.
இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிதுஇவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.அப்போது தென்படுமே

வெவ்வேறு பாதைகள்!அவற்றில்,
எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?எமக்கும் தெரியாது
உனக்கும் தெரியாது.
நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம்,

விபத்தல்ல.யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,
யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும்,உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.
தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.

எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.
நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,

இது எமது நாயகம்.
இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.

நன்றி- கமல்ஹாசன் - ஆனந்த விகடன்