வேசியின் வீடு


உனது நிலைப்பாடுகளில் பருவமடைகிறது
எழுதப்படாதயென் காவியங்கள்
எனினும் புத்தம்புதிய ராகஸ்வரங்களைப் பரிசளிப்பேன்
பூமியாகி வெடித்தணைத்துக் கொல்லவும்
உடலெங்கும் காற்றாகி
ஊதி வெடிக்கச் செய்யவும்
ஆழி கவ்வும் உலகில் அந்தரமாக்கவும்
குறுக்கிடுகளற்று விளம்பினாய்
இந்த மாலைப்பொழுது ஒரு மரணத்தை
உரிஞ்சும் பளிங்கென
இலைகளிலும் கிளைவெளிகளிலும்
பூத்துக்கிடந்த சூரியன் நஞ்சுறவுகளாய்
சுவாசம் உதிர்க்கும் துர்ச்சகுணத்தில்
வழியும் கோழைகளில் காடெங்கும்
காமவாசம் வீச
தாய்மையடைந்தாள்
சிறகு வளர்ந்த வேர்கள்
நடுவாசலில் நின்று தேம்பியழுவதை
நோக்கும் கண்களுக்கப்பால் தெரிவது
இராப் பிச்சைக்காரியின் முனகல் அல்லது
அற்றைப் பரிசக்காரியின் இந்திரஜாலம்
பெயரிடப்படாத ராகஸ்வரங்களைத்
துய்த்துணர்ந்த வேசியன் வீடெங்கிலும்
புனையப்பட்டுள்ளவை
தாய்மையின் அடிவயிறுகள்
தொண்டைக்குழியில்
துருத்தி அடைத்து நகர்ந்தபோது
மீன் செதில்களெனத் தரையெங்கும் வெண்தூள்
மிதங்கிக்கொண்டிருந்தன
புற்றின் மேற்புற நீண்டுகிடக்கும்
வாய்மூடிய பாம்புகளைச் சிதைத்தெரிய
காய்ந்த மாட்டுத்தோலினைப் போல்
மயிர்களுதிர்ந்த மைதானம்
சௌகர்யமாயிற்று
வலிகளை வரித்துச்சொல்லி அழத்தெரியாத
கண்ணாடி தேவதையின் உறைந்த பாதரசம்
ஒரு வெற்றுத்தாளென
வெளியெங்கும் விரைத்து நிற்க
வாழ்தலின் அடிவயிற்றை
வருடிக்கொண்டிருந்த பீதாம்பரம்
உயிரினைக் குவித்து பிதுங்கி பீய்ச்சியடித்த
மாத்திரத்தில்
மாறுதலற்ற பருவமாகிய
பருவக்கோடையதைக் கடந்துகொண்டிருக்கிறாள்
கடவுளின் கன்னியாஸ்திரி.

-கு.உமாதேவி

இன்றைய பகல் பொழுது என்னுடையது


உயர்ந்த நெற்குதிர்போலிருக்கும்
இரவின் ஆளுகையிலிருந்து
காற்றின் கயிறேறித் தப்பிக்கிறேன்
வெளிச்சத்தின் நதியில் மூழ்கி எழ
படீரென்று திறந்துகொள்கின்றன
என் உடலின் கண்கள்
எவ்வளவு சுகங்களை இழந்திருக்கிறேன்
செம்பழுப்பான முத்தச் சுவட்டைக்
கன்னத்தில் இடுகிறது சூரியன்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பறவையாகிப் பறக்கின்றேன்
உரசிப் புணர நெருங்கி வருகிறது
ஒரு நிஜப் பறவை
கீழிறங்கி வனங்களில் திரிகின்றேன்
விலங்குகளோடு ஓடுகின்றேன்
இலையுதிர்ந்து நிற்கும் மரங்களில்
முத்தங்களைக் கட்டித்
தொங்க விடுகிறேன்
நெடுநாள் தவித்த மழையின் கொடிகளை
என்மீது படர விடுகின்றேன்
முலையழுந்த என் நண்பனைத் தழுவுகையில்
பகலின் குளிகை தீர்ந்துபோகிறது
வருகின்ற இரா எப்படியோ
இன்றைய பகல் பொழுது என்னுடையது.

-சுகிர்தராணி

ஒற்றை சாட்சி


கிரணங்கள் கரைந்து வழியும்
பின்மாலை வேளையில்
என் அத்தனை பலவீனங்களையும்
சுருட்டி ஒளித்தபடி
அவ்விடத்தை அடைகிறேன்
பகலின் ஒளி துடைக்கப்பட்டு
மின்னும் அவ்விடத்தின் பேரமைதி
மிருகத்தின் ரோமத்தால் பின்னப்பட்ட
ஒரு போர்வையாகி என்னைப் போர்த்துகிறது
எத்தனை பாதச் சுவடுகள்
எத்தனை கிசுகிசுப்பான வார்த்தைகள்
பாதரசத் திவலைகள்போல்
காலடியில் உருண்டு ஓடுகின்றன
சொல்லாமல் விடப்பட்ட காதலை
மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
வாகைமரம் பூத்து உதிர்க்கும்
வெளிறிய பூக்களின் நெடி
உன்னை நோக்கி நீள
ஏதாவது விருட்சத்தின் அடியில்
நீயும் நின்றுகொண்டிருக்கலாம்
நிராகரிப்பின் ஒற்றைச் சாட்சியாய்.

-சுகிர்தராணி

ஆதித் தாயின் கைரேகை


ஒளியூடல் கொண்ட அப்பிரதேசத்தில்
என்பெயர் அழைக்கப்பட்டவுடன்
முகத்திலறையும் காற்றைப்
பருகியபடி நுழைகிறேன்
பாம்புகள் இணைந்தடங்கும்
ஓசையினும்
மெலிந்துவிடுகிறது என்குரல்
ஆழ்கடலின் குளிர்நீரோட்டத்தை
ஒத்தாயிருக்கிறது
என் நடையின் சாயல்
ஆடைக்கிழிசலைக் கையால்
மறைக்க முயன்று தோற்கும்
சிறுவனின் மருட்கை
என் தோலில் படிந்திருக்கிறது
கொடிகள் பின்னிய வழி
முற்றுப்பெற நிமிர்ந்து பார்க்கிறேன்.
கல்லாய் சமைந்து நிற்கிறது
ஆசிர்வதிக்கப்பட்ட அவ்விருட்சம்
ஆயிரமாயிரம் காலஅழுத்தம்
அதன் கண்களில் வழிகிறது
உடல் முழுவதும்
காலொடிந்த குகை ஓவியங்கள்.
குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பும்
என் கைகளில் சிவந்த பழமொன்று.
அதில் அழுத்தமாய் படிந்திருந்தது
ஆதித்தாயின் கைரேகை.

-சுகிர்தராணி

இரட்டைக்கால் சிலுவை


இரட்டைக் கால்களுடன் நிற்கிறது
விநோதமாய் சிலுவைமரம்
கயிறுகளைக் கொண்டு உயர்த்தப்படும்
என் தலையில் சுற்றப்பட்டிருக்கிறது
உபயோகமற்ற லங்கோட்டுத்துணி
உதடுகளில் சிவப்பு வண்ணம்.
என்கால்களும் விரிக்கப்பட்டு
கிளைமுறியும் விசையுடன்
இறக்கப்படுகின்றன ஆணிகள்
நெருப்புக் குழம்பெனப் பரவுகிறது
செஞ்சூடான இரத்தம்
நான் எதையும் முணுமுணுக்கவில்லை
மலையின் நெளிந்த பாதையில்
நீண்டிருக்கிறது வரிசை
அவரவர் விரும்பியபடி
ஆணிகளால் நிரப்பப்படுகிறது
என்னுடல்.
நிர்வாணம் கரைந்த புளிப்புநீர்
வாயில் பட்டதும்
என் திரைச்சீலை இரண்டாகக் கிழிகிறது
திருப்தியுடன் திரும்பிச் செல்லும்
உம்மை எதிர்கொள்கின்ற
சந்ததியின் குறிகளிலெல்லாம்
ஆணித் தழும்புகள்.

-சுகிர்தராணி

கூடல் எங்கேயும் சாத்தியம்.


என் அறைக்குள் பிரவேசிக்கும்
உன் விழித்திரையில் பதிகிறது
வியப்பின் பிம்பம்
நாற்புறமும் சுவர்களற்ற
அறையும் அமையக்கூடுமென்பதில்
குழப்பமுறுகிறாய்
உன் வருகையின் வெளிச்சம்
கதவுகளெவையும்
பொருத்தப்படாததை அறிவிக்கிறது
கூரையிலிருந்து
நட்சத்திரங்கள் கொட்டுகின்றன
நாயின் தோலாய் வழுக்குகிறது
காலடியில் தரை.
உன் செல்களின் உட்கருக்கள்
நீளத் தொடங்குகையில்
தும்பிகள் திரியும் வெளி
உன்னை வெட்கமூட்டுகிறது
உயிருள்ள மரங்களால்
அலங்கரிக்கப்பட்ட என்னை
குளிர்விக்கப்பட்ட கண்ணாடித் திரவம்
திரைச்சீலையாய் தொங்கும்
உன்னிருப்பிடத்திற்கு அழைக்கிறாய்
முகச்சதை அதிரச் சிரிக்கிறேன்
தெருவோரக் கல்லில்
குறியைக் கூர்தீட்டிக் கொள்ளுமுனக்கு
கூடல் எங்கேயும் சாத்தியம்.
-சுகிர்தராணி

பருவகால வண்ண உடைகள்


மழைக்காலங்களில்
தெருவில் அலையும் சிறுமிகள்
வெண்ணிற மழையையும்

வேனிற் காலங்களில்
வியர்வையை உரித்தெடுத்தபடியே
மஞ்சள் வெயிலையும் உடுத்துகிறார்கள்

தினமும் கருப்பு இரவுகளை உடுத்தி
தெருக்கோடி மூலைகளிடமும்
டூரிங் டாக்கீஸ் மணல் வெளிகளிடமும்
நட்போடு கிசுகிசுக்கிறார்கள்

தம் கட்டற்ற செயல்களால்
பருவங்களை வண்ண உடையாக்கி
காலம் இன்னும் செப்பனிடாத
குட்டி முலைகளின் மீது
உடுத்துகிறார்கள்

பிறகொரு நாளில் மொத்த பருவங்களும்
மொத்த நிறங்களும்
ஒரே நிறமாய் உருப்பெற்று

யோனிக் கிண்ணத்திலிருந்து
உருகி வழிய
அவ்வர்ணத்தை வியந்து சமைகிறார்கள்
சிறுமிகள்

-சல்மா