முகமூடி


அவளது வீட்டின் சுவர்களெங்கும்
அவள் செய்யும் முகங்கள்.

தனது
குருதியிலொரு துளி
மூச்சின் ஒற்றைத் துணுக்கு
மூப்புறுந் தசைத்திரள் சிறிது சேர்த்து
முகங்கள் செய்கிறாள்.

நடு நிசியில் பகலின் வெளிச்சத்தில்
எனது ஊரில்
எங்கோ ஓர் உயிர் இறக்கையிலும்
மற்றொன்று பிறக்கையிலும்
யாரோ ஒருவர் கொல்லப்படுகையில்
கேள்வி கேட்கும் உரிமை தொலைத்து
அவர்கள் தலைகள் தாழ்கையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

ஒரு பெண்ணின் காதல் மறுக்கப்படுகையில்
அவள் பலவந்தமாக இச்சிக்கப்படும்
பொழுதுகளில்
குழந்தைகள் பயந்து அழ மறக்கையில்
வெடிச்சத்தங்கள் பறவைகளின் கூடுகளை
உலுப்புகையில்
காரணமேதுமற்றுக் கடத்தப்பட்டவன்
தன் வாழ்வு பற்றி அச்சமுறுகையில்
வீடொன்று ஆளற்றுத் தனிக்கையில்
கிராமமொன்று கைவிடப்படுகையில்
அங்கே நாயொன்று
உணவின்றி அலைந்து உயிர்விடுங் கணத்தில்
பாலுந் தேனுங் குடிக்கும் எமது கடவுளர்
இல்லை எனத் திட்டப்படுகையில்
அவள் முகங்கள் செய்கிறாள்.

முகங்களின் மூச்சும்
மூடாத கண்களின் பார்வையும்
குழந்தைகளது என ஏமாந்து
அவள் உயிரூட்டும் முகங்கள் எப்படியோ
அவளது கனவுகளைக் களவாடிவிடுகின்றன
அவ்வப்போது.

-வினோதினி

உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்


இந்த வாழ்க்கை என்னிலிருந்தே உதிக்கிறது

உன் பழுப்பு நிறக்கண்களில் சலம்பும்
பருவவேதனைகளைக் கேட்டிருக்கிறேன்
உன் உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்
எனைத் தம் மென்விரல்களால் வருடுவதை
அனுபவித்திருக்கிறேன்

உலகையே மூழ்கடிக்கும்
சாம்பல்ஒளி உதிர்ந்து
மாலையின் பழுப்புஓளி வாசனை
கிளர்கையில்
என்னுள் நீ மூட்டிய காதலின் அதிர்வும்

என் உடலை வகிரும்
உன் சருமத்தின் பழுப்புக்கதிர்கள்;
அவை உன் தீர்மான அசைவுகளாலும்
அவைமீது விழும் செங்கதிர்களாலும்
ஆனவை

தூக்கத்தில் புரள்பவனைப்போல்
வெற்றுடலால் கதைக்கிறாய்; உன்
புனைவுகளும் கனவுகளும் அசைகின்றன

இந்த வாழ்க்கை
என்னிலிருந்தே உதிக்கிறது

- குட்டி ரேவதி

யோனிகளின் வீரியம்


பலகோடி ஆண்டுகள்
கழிந்தொரு பரிணாமத்தில்
உபயோகமற்று
உன்குறி மறைந்துபோகும்
அக்கணத்தில் புரியும்
உன் சந்ததிகளுக்கு
எம் யோனிகளின் வீரியம்

- குட்டி ரேவதி

வெறி நாய்கள் ஜாக்கிரதை!


நாய்கள் நன்றி உள்ளவை,
ஆனால் தன் இனத்திற்கு ?
அப்படித்தான் ஒரு நாள்
யார் பெரியவன் என்ற போட்டியில்
சில நாய்கள் ஒரு நாயை
குதறி வைத்தது ?
நாயே நீயும் நாய்தானே ?
என்று கேட்ட கடிபட்ட
நாய் உங்க தெரு பக்கமே
வரமாட்டேன் என்று விலகி
ஓடியது ?
கடித்த நாய்களுக்கோ
வெறிப் 'பிடிக்க'
நாய் இரத்தம் குடித்த
நாய்கள் சும்மா இருக்குமா ?
போவோர் வருவோரெல்லாம்
கடித்து வைத்தது !

நாய்களுக்கு நட்பெல்லாம் தெரியாது !
யார் எலும்பு துண்டு போடுகிறார்களோ
அவர்களுக்கு வாலாட்டும்
அவர்களால் ஏவிவிடப்படும் நாய்கள்
எவ்வளவவு நல்லவராக இருந்தாலும்
கடித்துவைக்கும் !

நாய்களை அடித்துக் கொள்வது
பாவம் தான் !
ஆனால் நாய்களோ,

வெறிநாய்கள் இருக்கும்
தெருவில் எச்சரிக்கை அவசியம் !

இல்லை என்றால் எவரும் கடிபடும்
அபாயம் இருக்கிறது !

முலைகள்


முலைகள்
சதுப்புநிலக் குமிழிகள்
பருவத்தின் வரப்புகளில்
மெல்ல அவை பொங்கி மலர்வதை
அதிசயித்துக் காத்தேன்

எவரோடு எதுவும் பேசாமல்
என்னோடே எப்போதும்
பாடுகின்றன
விம்மலை
காதலை
போதையை....

மாறிடும் பருவங்களின்
நாற்றங்கால்களில்
கிளர்ச்சியூட்ட அவை மறந்ததில்லை

தவத்தில்
திமிறிய பாவனையையும்
காமச்சுண்டுதலில்
இசையின் ஓர்மையையும் கொண்டெழுகின்றன

ஆலிங்கனப் பிழிதலில் அன்பையும்
சிசு கண்ட அதிர்வில்
குருதியின் பாலையும்
சாறெடுக்கின்றன

ஒரு நிறைவேறாக் காதலில்
துடைத்தகற்ற முடியாத
இரு கண்ணீர்த்துளிக்ளாய்த் தேங்கித்
தளும்புகின்றன.

-குட்டி ரேவதி

விதையுறக்கம்


ஆகவே விளிம்புநிலையைப் பற்றிக்கொண்டுத்
தொங்குகிறேன்

இனி ஒரு பொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக
நீர்நிலையைத் தேடும் பறவையைப்போல்
இரவின் உச்சத்தில் கனவு
கல்லெறிந்ததால் உண்டான வட்டங்களாய் விரிகிறது
அதன் ஒளிபரப்பில் உன் புன்னகையால்
எனைத் தேற்றுகிறாய்; தேற்றுகிறாய்

சிறார்கள் தமது உறுப்புகளை
மறைவுகளில் கண்டறிவதுபோல்தான்
நான் உன்னைக் கண்டறிந்தேன்
உடல், விதைக்கவோ வளர்க்கவோ
யாருமேயிலாது
பாழ்நிலமாய் உலர்ந்து வெடிக்கிறது
எச்சத்தில் ஊறிய விதையைப்
பறவைகள் வெளிக்கிட்டுப் பறக்கின்றன
ஒரு மழையின் ஸ்பரிசத்தால் குளிராதவரை
வெடிப்பில் வீழ்ந்த விதை
உறக்கம் தழுவிக்கொண்டிருக்கும்

இனி ஒருபொழுதும் உனைத் தேடாதிருப்பேனாக


-குட்டி ரேவதி

சூல் கொண்ட பாம்பு


பாம்போடு பாம்பு பிணையும்
அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும்
வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும்
உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ
முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும்
மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு
உடல் விரித்து ஆனந்திக்கும்
உயிரிழுத்துப் போட்ட பின்னும்
கண் துஞ்சாமல் சூல் கொள்ளும்
பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும்
உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும்
ஆணொன்று விரட்டிப் புணர
உடலெல்லாம் கருக்கொள்ளும்
வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத்
தாய் மரிக்கும்
உடலின் சிறகடியில் நினைவு குவித்து
முட்டைகள் அவயம் காக்கும்
கண்ணில் புத்துயிரின் வெறி
நெஞ்சில் பெருஞ்சுவாசம்
நிலைதாங்கி நின்றக்கால் கரு காலாட்டும்
பூக்களின் மீது வண்ணாத்தியாய்க்
காற்றில் மிதக்கும்
கரப்பானின் புற்றுக்குள்
குஞ்சுகள் பொரியுமட்டும்
சீறிக் காவல் காக்கும்
இரத்தச் சகதியில் கால் எழும்பி நிற்பதற்காய்
ஈரநாவால் நக்கி நக்கி உயிர்கூட்டும்
மெல்ல நினைவின் கண் திறந்து
கல்லுக்குள் பதுங்கும் முன்
கழுகொன்று கொத்திப்போகும்
புலம் பெயர்ந்த மண் பிறக்கும்
திசைகள் அறியும்
கனவுகளை அடக்கி
முட்டைகளாய் ஊதும்
நிலவொளியில் உடலைப் புரட்டி
உயிர்கொள்ளும் .

-குட்டி ரேவதி