உடலெழுத்து
வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.
-சுகிர்தராணி
Posted by Unknown at 2 comments
குல தெய்வம்

இன்று அதிகாலையின் முதல் கிரணத்தில்
மாலை சூடிய தெய்வங்களாய் நின்றிருந்த
செங்கற்களில் அவளும் ஒருத்தி
அரை நிர்வாணமாய் இடுப்பிற்குக் கீழ்
நிலம் பரவிய சிவப்புப் பட்டும் பின் பெய்த
மழையின் நனைந்த பாவாடையுடன்
அறையின் இறுக்கத்திலிருந்து
புல்வெளிகளின் வழியே சிவப்பு வண்ணாத்தியாய்
வானம் எம்பினாள்
காட்டுக்குள் வெளிக்குச் சென்ற இளம் பெண்ணை
இழுத்து வைத்துப் புணர்ந்தவனை
இரத்தம் கக்கச் செய்தாள்
சிறு சிரிப்பின் ஒலியோடு
காட்டோடு நின்று போனாள்
இரவெல்லாம் காடு சிரிக்கும்
இரட்டை மின்மினிகளாய்
அவள் கண் அலையும்
பெண்களின் உடல் ஒளிய
காட்டின் வெளி என்றாள்
செங்கற்களில் ஒன்றானாள்.
-குட்டி ரேவதி
Posted by Unknown at 0 comments
பெண்கள் விடுதி

வரையறுக்கப்பட்ட நுழைவாசலையும்
உயரமான சுவர்களையும் கொண்டதொரு நெடிய அறையில்
சன்னல்கள் வானின் விழிகளைப்போல திறந்திருந்தன.
ஏழு கட்டில்களும் அவற்றின் மீது வெண்ணிற மெத்தைகளும் இருந்தபடியால்
உறங்குவதற்கான வசதிகளையும் ஆயத்தங்களையும்
மட்டுமே கொண்டிருந்தன.
ஒருவரையொருவர் காணாத கணத்தில்
உலகச் சந்தையின் கவர்ச்சியான உள்ளாடைகளைக்
கழற்றிக் கொக்கிகளில் மாட்டிவிட்டுத்
தமது நிர்வாணத்தை உரித்து படுக்கையில் கிடத்திவிடுவர்
முழு இரவும் நிர்வாணம் கனவுகளோடு புணர்ந்து சிரிக்கும்
ஆண்மைய உடல்கள் கொக்கிகளில் சிக்கிச்
சுவர்களில் ஆடி உரசும்
விழுங்கிய பிளாஸ்டிக் கோட்பாடுகளைக் குதப்பி வெளியேற்றிவிட்டுக்
காமத்தின் குமைச்சலைக் சுயபுணர்ச்சியால் தீர்த்துவிட்டு
விடியும் முன் மாடியிலிருந்து குதித்துத்
தற்கொலை செய்து கொள்வர்
முகம்பார்க்கும் கண்ணாடியில் அணிவித்துத் துக்கித்த
ஆண்களின் வரைவாடைகள்
கண்ணடாடிக்குள்
உடலின் மீது அசைவதுபோல்
எதிர்ச்சுவரில் அசையும்
-குட்டி ரேவதி
Posted by Unknown at 0 comments
புறக்கணிப்பின் வெறுமை

இவ்விடம்
அதிகம் பரிச்சயமில்லையெனினும்
இங்கிருந்து கிளம்புவதென்பது
வீண் துக்கத்தினை உண்டாக்குகிறது
நீ என்னைத்
தீவினையின் எல்லையில் விட்டு
முன்னகர்ந்து செல்வதை அனுசரித்து
தடைசெய்ய மனமின்றி விலகிச் செல்கிறேன்
இடங்களும் மனிதர்களும் உருவாக்கும்
இந்த உறவும் பிரிவும்
படர்வதற்குள் கிளம்புகிறேன்
என் ஆதிகாலக் குகை வாழ்விற்கு
எல்லோருக்கும் போலவே
இங்கிருந்து எடுத்துச் செல்ல
ஞாபகங்கள் உண்டு
விட்டுச்செல்லத்தான் எதுவுமில்லை
விட்டுச் செல்கிறேன்
புறக்கணிப்பின் வெறுமையை
நிராகரிக்கும் வலிமை என்னிடம் எப்போதுமிருந்ததில்லை
என்கிற சிறு குறிப்பை
-சல்மா
Posted by Unknown at 0 comments
மணல் !! தசாவதாரக் கவிதை

‘மணல்
கூழாங்கற்களின்
குழந்தை--!
நீங்கள்
மண்ணை வெட்டுவது
எங்கள் மழலையை
வெட்டுவதற்குச் சமம்-!
அடுத்தவனுக்குப்
பள்ளம் தோண்டியே
அடையாளப்பட்டவனே...
எங்கள்
மண்ணையும் தோண்டிப்
பூமியை புதைத்துவிடாதே!
சோறு போடும்
நிலத்தைக்
கூறு போடும் நீ
விந்துக்குப் பிறந்தவனா?
சிறுநீருக்குப் பிறந்தவனா?
மணல் தரையை
நீங்கள்
மாமிசமாய் அறுத்துத் தின்றால்
எங்கள்
பாவாடை சட்டைக்காரிகள்
எங்கே
பாண்டி ஆடுவது?
எங்கள் மழலைகள் எங்கே
மணல் வீடு கட்டுவது?
கோவண மனிதர்கள்
எங்கே
கொல்லைக்குப் போவது?
நாங்கள்
ஒத்தையடிப்பாதையில்
எப்படி
ஊர் போய்ச் சேருவது?
வேரறுந்த மரத்தின் கீழ்
எப்படி
வெயில் இளைப்பாறுவது?
அகதியாய்ப் போன
பறவைகளை
யார் அழைப்பது?
உங்கள்
சிகரெட் புகையில்
மழை வரும்
என்பதற்காக
எங்கள்
தாகத்தைத்
தள்ளிப்போட முடியாது!
திருட்டுத்தொழிலை விட்டுவிடு
திருடிய மண்ணைக்
கொட்டி விடு!
இனிமேல் திருட நினைத்தால்...
இவனைஇரண்டு துண்டாய்
வெட்டிவிடு!’
-கபிலன் தசாவதாரம் படத்தில்
Posted by Unknown at 0 comments
ஒளிந்திருந்த முலைகள்

கீழே விழுந்துவிட்ட ஐம்பது பைசாவை
குனிந்து எடுத்த நொடியில்
என் உள்ளாடையில் படிந்துவிட்டிருந்தன
சில பார்வைகள்
கம்பியை எட்டிப்பிடித்த தருணத்தில்
எங்கோ ஒளிந்திருந்த என் முலைகளைத்
தேடிக் கொண்டிருந்தன
சில பார்வைகள்
கை வைத்து மறைப்பதைக் கூட
அவமானப்பட்டுச் செய்கிறேன்
"முன்னாலே போமா" என்று
பின்னாலே தடவிவிட்டு போகும்
நடத்துனர்
கூசிய பதட்டத்தோடு திரும்பிப் பார்த்தால்
மகளிர் இருக்கையின் இடுக்குகளில்
கூனிக்குறுகி என்னைப் போலவே
சில திரௌபதிகள்
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
மரணித்து நிமிர்கிறது வாழ்க்கை
ஆண்டவா!
எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறோம்
ஆனால் அடுத்த பிறவியில்
ஆண்களுக்கு வைத்துவிடு மார்பகத்தை...
-முத்தாஸ் கண்ணன்
Posted by Unknown at 2 comments

