நம்பிக்கைப் பிரதிகள்


எங்கள் வீட்டு மொட்டை மாடி
பிரம்புச் சாய்வு நாற்காலி
கருத்த வானம் நிலவொளி
சாலை ஓரத்து இளவட்டங்களாய்
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்
திண்ணை தூண் முற்றம்
என்றிருந்த எதிர் வீடு
இன்று இரும்புக் கம்பிகளாய்
வான்நோக்கி வளர்ந்தபடி,
காலம் காலமாய் உலகில்
எத்தனை மாற்றங்கள்!
வானத்து மேகத் திட்டுக்கள் போல்
பனி பூத்த உலகம்
இயற்கையோடு முரண்படாத மனிதன்
முதல் காமம் தணித்துச்சொன்னான்
‘கடவுளின்முதல் பாவம்-பெண்’
நூற்றாண்டுகள் ஓடினபூமியில்
கீறல்கள்என்மீது வடுக்கள்.
பந்தயங்களில் பணயமாக்கப்பட்டேன்
கோயில்களில் விக்கிரங்களாக்கப்பட்டேன்
எனக்காகப் போர் தொடுத்தார்கள்
கவர்ந்தவனிடமிருந்து மீட்டார்கள்
காவியம் படைத்தார்கள்
உடமையாய் உரியவளாய்
உயிரற்ற ஜடப்பொருளாய் ஆகிப்போனேன்.
வாழ்க்கையோ உலைக்களம்
பாதையெங்கும் சிதைகள்
ஆங்காங்கே பெண் மாயை
ஒழிக்க வாளுருவிய கூட்டங்கள்
முன் அறையில் எனது முதல்
சுயம்வரப் படலம்பற்றிய பேச்சுவார்த்தைகள்
மனம் பாடியது- சிலிர்த்துச்சிறகு
விரிக்கும் பட்டுப் பூச்சிகள்என்னுள்
நாளை பற்றியநம்பிக்கைக்
கனாக்கள் இன்னும் விரல் பற்றும்
குழந்தைகளாய் நாங்கள்.
-கனிமொழி