எள்ளுப் பூ கனவும் ஸ்வெட்டர் அனிந்த வன தேவதையும்.


கனவெல்லாம் விரிகிறது எள்ளு பூ ஒன்று.முதலாய் அதை பார்த்த 
நேற்று கனவாகவும், கனவு நிஜமாகவும் மிதந்து 
கொண்டிருக்கிறது மஞ்சளில்.

மஞ்சள் தாண்டி நுழையும் அத்தி நிறைத்த ஆலம் விழுதும்,
ஊதா பூ மறைத்த சிவப்பு முள் செடியும், கனவிற்குள் காடு 
வளர்க்க தயாராகிறது.

குளம் வேடிக்கை பார்த்த தருணம், மிரட்டிய மலை மாடு 
ஒன்றிற்கு பயந்து திரும்பிய தாமரைகள், பயம் ஏற்படுத்துகிறது 
கனவு முழுவதும்.

கனகாம்பரமும், செவ்வந்தி பூவும் தேங்கிய குடிசை வீடொன்று, 
எப்போதோ பெய்த மழையை,உன்னை, நாம் அருந்திய மழை 
தேநீரை நினைவு படுத்துகிறது.

சாரல் உணரும் இன்னொடியில், கனவில் மழை பெய்யுமா என்று 
ஜினியா பூவொன்றிடம் கேட்டு செல்கிறார்கள் யாரோ.

சாரலும், எள்ளு பூவும் கொஞ்சம் கையில் எடுத்து, மெஹ்ரூன்
ஸ்வெட்டர் அணிந்த வன தேவதையுடன் காடு பார்க்க செல்கிறேன், 
மஞ்சளும் ஊதாவும் சிவப்பும் பச்சையும் பின்தொடர.

-கவிதா சொர்ணவல்லி.