தாள்களின் நிர்வாணம்


என் கறுத்த ஆழங்களில்
உன் கசடுகள் படிந்தபின்
உறங்கிப் போகிறாய்
உன் அடியிலிருந்து உருகி
மழுங்கிய அலைகளின் பரப்பில்
தீர்ந்த கதைகளை எழுதுகிறேன்
உரத்த மஞ்சள் நிறத்தில்
எழுத்துகளின் மை ஒளிர்கிறது
முதுகின் கசகசப்பில்
புரண்டு படுத்தவன்
என் மின்னலின் அதீதத்தால்
தாக்குண்டு எழுகிறாய்
இயல்பாய் அத்தியாயங்கள் இடம்மாற
கருமுட்டையிலிருந்து
திருத்தங்கள் ஆரம்பிக்கின்றன
வார்த்தைகளின் முதுகு
ஒடிக்கப்படுகிறது
சொற்களின் அர்த்தங்கள்
பதுக்கப்படுகின்றன
உன் வஞ்சனை நீரால்
பெரும்பள்ளங்கள் நிரம்புகின்றன
ஒருவாறு உன்னமிலங்கள் வடிந்ததும்
எல்லம் அடிக்கோடிட்டு
அழிக்கப் பட்டிருக்கின்றன
குறட்டை ஒலியோடு உறங்கும் உன்னை
ஏளனமாய் பார்க்கிறது
அத்தாள்களின் நிர்வாணம்.

- சுகிர்தராணி

நாய் பொம்மைகள்


1. சாவிக் கொடுத்தவுடன்

குதிக்கும், தவ்வும், நடக்கும்

குரைக்கும், முன்கால் நீட்டி

மடங்கும் பொம்மையை

ஆச்சர்யத்துடன் பார்க்கும்

மனிதனுக்கு மேலதிகாரி

அழைப்புவர செல்போனோடு

நகர்கிறான் பதற்றமாய்2. வெண்பட்டு பஞ்சு பொம்மையை

காதலிக்கு தேர்வு செய்தவன்

ஏ.டி.எம் செ‌ன்று திரும்புவதற்குள் அது

இன்னொருவன் பின்னால்

வாலாட்டி சென்றிருந்தது3. பிச்சைக்காரனொருவன்

பிளாட்பாரத்திலிருந்து வெறிக்கிறான்

ஷோகேஸ் பொம்மையை

நாய்போல நடந்தும், குரைத்தும்

‌ விளையா‌ட்டு காட்டுகிறான்

அவன் குழந்தைக்கு4. நாற்பது வயது‌ மனிதரின்

முன் தலைகுனிந்து நடக்கும்

இள‌ம்மனைவியின்

இரண்டு கைகளிலும்

நாய் பொம்மைகள்.5. வாலறுந்து உடைந்த

நன்றி கெட்ட நாயொன்று

மறுநாள் குப்பைத்தொட்டியில்

விழுந்தது சுவாரஸ்யமற்று6. நடைபாதை கடைக்காரன்

தேனீரருந்தி திரும்புவதற்குள்

அவசரமாக புணர்ந்து

முடிந்திருந்தது

நாய்பொம்மைகள் இரண்டு7. நாலடி நாய்பொம்மையோடு

வந்தவன் மேல்

வன்மமாய் பாய்கிறது

வீட்டில் வளர்க்கும்

விசுவாச ஜீவனொன்று
- என். விநாயக முருகன் ( navina14@hotmail.com

நாய்களே உங்கள் சண்டையில் என்னை வம்புக்கு இழுக்காதீர்கள் (REPEATED HITS)


வலப்பக்கத்து வீட்டு கருப்பு நாயும்,
இடப்பக்கத்து வீட்டு சாதி நாயும்
முக்கை நக்கிக் கொள்ளும் அளவுக்கு
நெருங்கிய நண்பர்களாகத்தான் இருந்தன !

எனக்கு நாய்கள் என்றால் பிடிக்கும் ,
என் வீட்டில் எந்த நாயும் இல்லை.
ஆனால் என் வீட்டுக்கு
நாய்கள் வந்து போவதுண்டு.


இருவீட்டு நாய்களும் எலும்பு அதிகம்
கிடைக்கும் போது முறைத்துக் கொண்டாலும்
அடுத்த தெரு நாய் கவ்விக் கொண்டு
சென்றுவிடக் கூடாதே என்ற 'பாசத்தால்'
ஒரு காலத்தில் சேர்ந்து எலும்புதுண்டை
பங்கு போட்டுக் கொண்டன !

ஒரு நாள், சாதி நாய், கருப்பு நாய்க்கு தான்
சாதி நாய் என்ற பெருமையை கூற
இதைப்பிடிக்காத கருப்பு நாய்,
சாதியைச் சொல்லி திட்டி குறைக்க,
சாதி வெறி கொண்ட நாய் நன்கு தெரிந்த
நாய்களை கூட்டிக் கொண்டு வந்துவிட்டது.
என்னால் முடிந்த அளவுக்கு சண்டையை
விலக்கி நாய்களை
சமாதானமாகப் போகச் சொன்னேன் !

எந்த நாயும் கேட்பதாக தெரியவில்லை
சாதி நாய் தனது நண்பர்கள் நாயிடம் சொல்ல
அந்த நாய்கள் என்ன ஏது என்றே கேட்காமல்
குறைக்க ஆரம்பித்துவிட்டன.

அதுமட்டுமின்றி இந்த கருப்பு நாய் தான் சொறிநாய்
இது பலரையும் கடித்துவிட்டது,
கல்லால் அடிக்க வேண்டும் என்று ஊரே கேட்கும் படி
அனைத்து நாய்களும் குறைத்து வைத்தன.

நாய்கள் அடித்துக் கொள்ளட்டுமே, ஆனால்
எனக்கு பழக்கமாக கருப்பு நாய் இருப்பதற்காக
அதை வெட்டிவிடு என்கிறது சாதிநாயும்
அதற்கு ஆதரவான மற்ற நாய்களும் !

இந்த நாய் சண்டையின் குறைப்பின்
சத்தத்தில் உயர் சாதி நாய்களும்
உற்சாகமாக குலைக்கின்றன.
என்ன எழவவாவது ஆகட்டும்,

நாய் சண்டை நமக்கெதுக்கு என்று
ஒதுங்கிப் போக நினைக்கிறேன் !
நாய்களே உங்கள் சண்டையில்
என்னை வம்புக்கு இழுக்காதீர்கள்
நாய்களே!