மரணித்தவனின் மிச்சம்

மழைக்காலத்தில் குரலெழுப்பும்
தவளையின் காற்றுப்பையாய்
துயரத்தால் பெருத்திருக்கிறது
மரணித்தவன் வீடு.

வாழ்ந்த பொழுதுகளில்
அவனது கழிவிரக்கமும்
முற்றிய கொடுங்கோன்மையும்
இரத்தமுறைந்த முதுகின் பின்புறம்
அலசப் படுகின்றன.

விதவிமான குரல்களில்
உருகி வழிகின்றன
உயிரின் இழப்புகள்.

அசைவற்றவனின் ஆன்மா
சூடேறிய புகைவளையமாய்
காலவெளிக்குள் பயணிக்கிறது
ஒளிவேகத்தில்.

இறுதி ஊர்வலத்தின்
சிந்திய பூக்களில்
அறுந்து தொங்குகிறது
வாழ்வின் இரகசியம்

உள்ளறையிலிருந்து
கழுவித் தள்ளும்
முற்றத்து நீரில்
தளும்பித் தெறிக்கிறது
மரணித்தவனின் மிச்சம்.
- சுகிர்தராணி

ஒளியை அறுவடை செய்யும் பெண்கள்


நதி கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக்கிடக்க
நிலவை மறைத்து நிற்கும் தாழங்காடு

இருளை முக்காடிட்டு
அரிவாளும் சுரடுமாக நடப்பர்
ஆற்றங்கரைக்கு

பாம்பு தீண்டி இறந்தவளின்
நினைப்பு வந்தாலும்
அல்லாவே என்றபடிதான்
தாழையை இழுத்தறுக்கிறார்

புதர் அசைய அசைய
முள் கீறி நீரில் சிதைந்து கசியும் நிலா
தாழையோடு நிலவை அறுத்துக் கட்டி
தாயைக் காவல் வைத்து
மறைவில் மலம் கழிக்கும் மகள்

இரவுக் காற்றில்
பாம்பென நெளிந்து அசையும் தலையுடன்
வாழ்ந்த கதை இழந்த கதை பேசித்திரும்புகிறார்

சிலர் பறி முடைய
பகலைக் கண்டு அறியாத
மணமாகாப் பெண்கள் நிலவைக் கிழித்து
பாய்பின்னி மஞ்சள் ஒளியை
அறைக்குள் நிரப்பி உறங்குகிறார்
- மாலதிமைத்ரி

காகிதக்கப்பல்


பெரியவர்கள் மயங்கி உறங்கும்
மதியக்கிறக்கவேளையில்
நான் தனியே அனுப்பிய காகிதக்கப்பல்
வழிமறித்த தீவில்
கரையொதுங்கியிருக்கக்கூடும்
நீந்திக் களைப்புற்ற மீன்கள்
அக்கப்பலேறி மறுகரை சென்றிருக்கலாம்
கடற்பரல் அலைக்கழிக்க
சில கணங்களாவது அதன் தலைசுற்றியிருக்கலாம்
திசைமாறிப் போகாது
காற்று தன் கைகளைத் துடுப்பாய் வலித்திருக்கலாம்
வானத்தின் வண்ணம் தூவிய முகத்தைத்
தன் நீரால் கழுவும்
கடலின் மறுகரைக்குச் சென்றிருக்கலாம்
சூரியன் கால் அலம்பும் நேரத்தில்
ஒய்யாரமாய்க் கரைதட்டியிருக்கலாம்

- குட்டி ரேவதி