ஆணுறை


கண்ணைப் பாம்புகள் கொத்தும்
கதைகளின் திசைகளிலிருந்து
விடுவித்துக்கொண்டாள் அரசி.
கண்ணாடியின் நீர்மவெளியில்
திகைப்பூட்டிய தனது உடலைப் பொத்தி மறைப்பதில்லை
அரசனின் ஆணைகள் வரிந்த ஓலையையும் வாசலையும்
திறந்துவைப்பதில்லை

ஆனால், அரசி கற்க நிறைய கலைகள் பிறந்தன
பனிபூமியின் மீது அது எழுப்பும் மூச்சைப்போல
உலவப் பயின்றாள்
முழுநிலவின் இரவுகளில் உடலைப்
பிணமெரியும் வாசனையோடு மலர்த்தினாள்.
நட்சத்திரங்களின் மொழியைப் பயின்றாள்
புற்களுக்கு உயிரூட்டக் குழந்தைகளுக்குக் கற்பித்தாள்
பெண் மூட்டும் தீ
ஏற்கனவே உருவாக்கப்பட்ட சொற்களைச்
சாம்பலாக்கவே என்றறிந்தாள்

என்றாலும் இரவு, பகலுக்கு முன்பாய் விடிந்தது
காவலர்கள் அவள் கண்அவிழ்க்கக் காத்திருந்தனர்
பேரேடுகள் அறைவாயிலை அடைத்தன.
தளபதிகள்
ஓலை வாங்கிட அரசியைத் தேடினர்.
ஆடை மாற்றும்
மறைப்பு தேடிக் காத்திருப்பாள் அரசி.
காலத்தின் கோடுகள்
அவளது முகத்தில் வரைபடங்களாயின.
அரசனோ ஓர் இரவும்
ஆணுறையை எடுத்துவர மறப்பதில்லை.

- குட்டி ரேவதி