சக்கரம் - தஸ்லிமா நஸ்ரின் கவிதை!


அவர்கள் சிவப்பு ஆடைகளை
அவளுக்குக் கொடுத்தார்கள்
ஏனெனில் சிவப்புதான்
கண்ணைப் பறிக்கும் நிறம்,
அவளின் கழுத்தில் தொண்டையில்
நெக்லஸ் போட்டிருக்கிறார்கள்,
கழுத்தில் சுற்றியுள்ள நெக்லஸ்
நாயின் கழுத்தில் போடப்படும்
வார்ப்பட்டையைப்போல இருந்தது.
அதை விருந்துகளுக்கும்
விழாக்களுக்கும் அணிந்துகொள்கிறார்கள்.
அவளின் காதுகளும், மூக்கும்
கூர்மையானவை.
காதிலும், மூக்கிலும்
அணிகலன்களைப் போட்டிருக்கிறார்கள்;
ஏனெனில் அவளே சிறிது ஒளிர்கிறாள்,
அணிகலன்கள் வரை வைடூர்யங்களாலும்
இன்னும் ஒளிர்கிறாள்
அவளுடைய மெருகு கூடுதலாகிறது.
அவளுடைய கரங்களுக்கு
வளையல் போட்டிருக்கிறார்கள்
அவை விலங்கின் வடிவத்திலமைந்து
கைகளை அசைக்க முடியாமல் செய்கின்றன
கணுக்கால்களுக்குக் கிணுகிணுக்கும்
காப்புகள் அணிவித்திருக்கிறார்கள்
இதனால் அவள் எங்கேயிருக்கிறாள்
என்பதை எளிதில் அறிய முடிகிறது.
முகத்தில் அழகுபடுத்தும் பொருள்களை
வண்ணப்பூச்சுகளைத் தடவிக்கொள்கிறாள்.
கண்களுக்கு, கழுத்திற்கு,
உதடுகளுக்குப் போன்ற இடங்களுக்கும்
மேலும் கூடுதலான பூச்சுகளைத்
தேவையான அளவிற்குப் போடுகிறாள்.
ஒரு விற்பனைச் சரக்கைப்போல மாறினாள்.
கிராமங்களில், நகரங்களில்
நடைபாதைகளில், தெருக்களில்
சேரிகளில், உயர்குடியினர் வகிக்குமிடங்களில்
உள்நாட்டில், வெளிநாட்டில்
எல்லா இடங்களிலும் அவள்
விற்பனைச் சரக்கானாள்.
பல்வேறு வழிகளில், பல விலைகளில்
அவள் விற்கப்படுகிறாள்.
அவள் தொடர்ந்து விற்கப்படுகிறாள்.
வெளிப்படையாக விற்கப்படுகிறாள்.
சில இடங்களில் விற்பனையை
நவீனமயமாக்கியிருக்கிறார்கள்.
பெண்ணின் வளர்ச்சியென்ற போர்வையில்
நவீனமயமாக்கப்பட்டதாகப் பாராட்டுவார்கள்.
பெரும்பாலான முட்டாள் பெண்கள்
சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்கள், தங்கள் ஆசைகளை
நிறைவேற்றிக்கொள்வதற்காக
விலங்குகளை மாட்டிக்கொள்கிறார்கள்.
இந்த விலங்குகளை உடைப்பதற்குச்
சிலர் உருவாகுகிறார்கள்;
அவர்களும்கூட இந்தச் சிக்கல்களில்
சில தடவைகள் வந்து
வலையில் சிக்கிக்கொள்கிறார்கள்
அல்லது சிலர்
வேறு வழியில் இந்தப்
பொறியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
-தஸ்லிமா நஸ்ரின்

பெய்ய மறந்த மழை


உரோமக் கண்களுடனான
மெய் சிலிர்த்ததில் நான்
வாழையின் நிழல் நடனம்
என் விரல்களில் குருதி பார்க்க
பற்களை நீட்டியபடி நண்டுகள்…
அலைகளின் வால் முடிச்சுக்களை
கரைகளின் துணிக்கை இடை வெளிகளுடன்
பின்னிக் கொண்டிருக்கின்றன

சோதரனே!
உன் உணர்வுகள் பொய்மையூட்டப்பட்டு
உய்த்தலில், உடல்களின்
கலங்களின் வேண்டுதல்களில்
ஒவ்வொரு(கு)புகையையும் உறிஞ்சி
நீ வாழ்...
அது பொய் - அவள் சொல்வது
என் கவிதைகளின் புரியாமை பற்றி

பேனைக் குருதியின் ஒவ்வொரு செல்களிலும்
என் அங்கங்களை தோயவிட்டு
கருக்கூட்டப் பார்க்கிறேன்...
என் எண்ணங்கள் மதர்த்து
கவிதைகளின் கழுத்துக்களை
கொல்ல...இல்லை --- பாவமவை

என்னை துரோகித்து விட்டதாக
நீயும் அவளும்....
நான்: மீண்டெழ ஒற்றை வால்ப் பறவை
கூவியழைத்து விரலிடுக்குகளில்
உயிர் பற்றி
தூக்கிப் பறக்க
உன் எதிரொளி என்னவாகும்?
கல்லெறிவாயா
எனை ஊசிக்குளிரில்
நிர்வாணப் படுத்தி
கொட்டுப் பூச்சிகளை மேயவிடுவாயா?
அல்லது
நீயே என்னை மிருகித்து விடுவாயா?
பிணத்துடனான புணர்தல் - உனை
பூரணப்படுத்தாத
நிர்வாணப்படுக்கையே....

-சலனி(இலங்கை)

பயணம்

நிச்சயிக்கப்பட்ட பயணத்திலெல்லாம்
அவ்வீட்டை கடந்து செல்கிறேன்

காய்ந்த முற்றத்தில் காகிதப்பூக்கள்
கொட்டிக் கிடக்கின்றன.

தென்னையின் உலர்ந்த இலையொன்று
தரைதொட்டு அசைந்தாடுகிறது
நீரறியா தொட்டிகளில்
கழுவேறுகின்றன இரண்டு மலர் செடிகள்

கனத்தப் பூட்டினை இறுக்க்கியபடி
மூச்சற்று நிற்கிறது கதவு

மருந்திடாத காயத்தைப் போல்
புரையோடி யிருக்கின்றன சன்னல்கள்

தளர்ந்த கொடிகம்பியில்
உள்ளாடையின் சாயலோடு
துணியொன்று ஆடிக்கொண்டிருக்கிறது

அமர நிழலற்ற தவிட்டுக்குருவிகள்
இடவலமாய் பறந்து செல்கின்றன

ஒருநாள்
கதவு திறந்திருக்க
வெட்டப் பட்டிருக்கின்றன
காகிதப்பூ செடிகள்

பின்
பயணம் வாய்க்கவில்லை அவ்வழியே.

-சுகிர்தராணி

கடிதங்கள் !!


ஊர்வன சுமந்துசெல்லும் மண்ணாங்கட்டிகளைப்போல
உருட்டிப்புரட்டிக்கொண்டும்
பலசமயங்களில் தரையோடு அழுத்தும் சுமைகளில்
இழுபட்டுக்கொண்டும்
என்னுள் கிளர்ந்தெழுந்து உன்னை வந்துசேர்ந்துகொண்டேயிருக்கிற
நுரைக்கும் வாசகங்கள்
அதீதக் காமம் பொதிந்த சொற்களையும்
வெறுமையின் கதவுகளைச் சிதைக்கும் உத்திகளையும்
நீ தரமறுக்கும் உணர்வின் பேதலிப்புகளைக் கோரியும்

பிரித்துப்பார்க்கத் துணியாமல் நீ மூலைகளில் விசிறும்போதுகூட
அவை உயிர்கொண்டு முனகுவதில்லை
கல்லறைக்குள் போய் இறங்கியதைப்போல்
சொற்கள் கண்திறந்தவண்ணம்
வண்ணத்துப்பூச்சிகைளத் தேனருந்த அழைத்தவண்ணம்
பிறந்துகொண்டேயிருக்கின்றன

பாலுணர்ச்சி விழித்துக்கொண்ட சொற்களை
அடைக்காமல் அனுப்பும் கடிதங்களையும்
முகர்ந்துபார்க்கிறாய் நீ
மல்லிகையின் கமழும் நாற்றமும்
இதயப்பாலையில் நிர்வாணமுறுத்துகிறது என்னை

உணர்ச்சியின் பிளிறல் கிளப்பும் ஒளிக்கம்பத்தில்
சுழலும் கதிரெழு துகள்களினும்
உன் உருவத்தை எனக்குத் தரமறுத்தாய்

-குட்டிரேவதி

சிலம்புகள் ஏதுமற்ற அவள்


இதழ்சிதையா செங்கழுநீர் மாலை
மார்பிலே தவழ்ந்திருக்க
வெந்நிறமான அகில்புகை
கூந்தலிலிருந்து மேலெழும்புகிறது

கரும்பும் வல்லியும் வரையப்பட்ட
அகன்ற தோள்கள்
சந்தனப் பூச்சினால் பளபளக்கின்றன.

உயர்ந்த இளங் கொங்கையின்மேல்
மெல்லிய பற்தடங்கள் அமிழ்கின்றன

பொற்கலத்தின் வெண்சாதத்தை
பிசைந்து அவள் ஊட்டுகிறாள்
மெருகேறிய கரும்பாறை முற்றத்தில்
குழந்தைகளிரண்டு விளையாடுகின்றன

தூரத்தில்
காமம் தீர்ந்த ஒருவன்
வனப்பழிந்து வந்து கொண்டிருக்கிறான்

நெருங்கியவன்
சவுக்குப் படலில் கையூன்றி
கண்களால் துழாவ

சிலம்புகள் ஏதுமற்ற அவள்கால்கள்
அவனைச் பரிகசிக்கின்றன

இரட்டைமுலைகள் அதிர
அவள் இதழ்களில் தெறிக்கிறது
ஊழிப்புன்னகை.

-சுகிர்தராணி

கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்


ஒளியைத் தின்று பருக்கிறது
காந்தாரி வளர்க்கும் இருள்

தடவியறியும் பழைய பொருட்களின் ஞாபகங்கள்
அவள் மார்பில் இரகசியமாய்ச் சீறியடிக்கின்றன,
அவற்றின் கிளர்ச்சி தாளாமல்
கண்கட்டை யவிழ்த்து ஒரு முத்தம்
ஒளியை வணங்குதல் போலே

கணவன் அவ்வப்பொழுது வினவுகிறான்
தொலைவில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

உறங்க மாட்டாமல் தவிக்கின்றன
அவள் அறிந்த புல்வெளிகளும்,
தாமரைக் குளங்களும் நதியின் பயணங்களும்

உறக்கங்களின் பொழுது எழுந்து
கனவுகளின் அழுத்தத்தை
முடிச்சுகளை இளக்கி வெளியேறுகிறான்

தனது அரண்மனைத் தோட்டத்து மழை
விரகத்தில் புரள்கிறது என்பாள்

முந்தானையின் எல்லையில் தொங்கும்
அலங்காரக் குஞ்சம் கணவன், என நினைப்பாள்

இருளின் சதையைக் குறுவாளால் அரிந்து
பெருகும் குருதியே சூரியனின் இரத்தம்,
ஒரே கனவு அடிக்கடி

ஒரு நாள் கண்கட்டை யவிழ்த்துவிட்டு,
"கடவுளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்" என்றாள்.


-குட்டி ரேவதி

அவள் நிர்வாணத்தை எறும்புகள் கடிக்கும்


தேசிய நெடுஞ்சாலை
சிக்னலுக்கு அருகில்
இரவு நேர கால்செண்டர்
பகலெல்லாம் தூங்குகிறது
அவள்வீட்டு சூரியன்.

தாயின் அகாலமரணத்தில்
அவளுக்காக ஒதுக்கப்பட்டது
இந்த அலுவலகத்தில்
தாயின் இருக்கை.
கேள்விகளுக்கு விடைதெரியாத
அவள் வினாத்தாள்களே
அவளுக்கு
இந்த வேலைக்கான
உத்தரவாதமானது.
நேர்முகத் தேர்வில்
மொழி தெரியாத அவள் முகம் கூட
வேலையில்லை என்றவளை
விரட்டவில்லை.

இந்த வேலையில்
அவளுக்கு வருத்தமில்லை.
ஆனால்-
எப்போதாவது அவள் நிர்வாணத்தை
எறும்புகள் கடிக்கும்
"இவனில் எவனாவது
அப்பனாக இருந்தால்.?."

-புதியமாதவி

அருவருப்பான கவிதை!


யோனி
தின்பண்டத்தைக்
கணவன் கடித்துண்ணுவதற்குப் பதிலாக
அரிந்துண்ணலாம்
எவருக்கும் அவனாக உண்ணக்கொடுத்தும்
களிப்புறலாம்
முலைகளோ பண்டமன்று
கண்ணாடிக்குடுவையில் நிரம்பி வழியும்
மதுபானம்
விதவிதமான மதுபானங்கள் நுரையோடு வழிவதைப்
பருகாத இரவுகளில் கனவுகள் வருவதில்லை.
உடலோ ஒரு வெள்ளைக் காகிதம்
உறங்கிய பின்போ
வாங்கிய கனவிலோ சொல்லின் கீறலோ
துளியும் சிந்திவிட்டால்
கற்பின் கிரீடத்தில் ஒளி மங்கும்
அயல்நாட்டிலிருந்து திரும்பும் கப்பலாய்
வழி மாறிக் கடலில் திரியும்
காலை முதல் இரவு வரை
இடத்தைப் பொறுத்து முத்தம் விலை என்றாலும்
யோனி தின்பண்டமன்று

-குட்டி ரேவதி

விதைகளைப் புணர்ந்த கதை


விரகத்தின் இழைகளால் நெய்யப்பட்ட
இரவாடையை நான் அணிந்திருக்கிறேன்

விபத்தொன்றில் கணவனை இழந்த
அபலையின் இசைப்பாடல்
முதல்புணர்வின் வலியருந்தி மிதந்து வருகிறது

வாயில் பாலொழுகும் குட்டிகள் தொடர
பருத்த முலைகளை வீசியபடி
தெருக்களில் அலைகிறது முதிர்நாயொன்று

கனியின் தோல்பிரித்து
விதைகளைப் புணர்ந்த கதையை
வெட்கமில்லாமல்
என்னிடம் பகிர்ந்து கொள்கிறது காற்று

வண்ணமற்ற ஒளியின் கட்டுறாத கைகள்
என் அடியாழங்களில் பயணிக்க
கோபத்தின் முலாம் பூசிய சொற்பறவைகள்
எங்கிருந்தோ பறந்து வருகின்றன.

நான் எழுத ஆரம்பிக்கிறேன்

அந்தரத்தில் தொங்கியவாறு
என்னைப் பரிகசிக்கிறது
சீம்பாலின் அடர்த்தியாய் திரண்ட மை

தூக்கம் தன் கண்களைத்
தழுவிக்கொள்ளும் அகாலத்தில்

இறுக மூடியிருந்த என் உள்ளங்கைப்பிரித்து
புன்னகைத்தபடி வெளியேறுகிறது தனிமை.-சுகிர்தராணி

தலைகுனிந்த அகதிகள்


"முகங்கள் சிதைந்து
யோனிகள் கிழிந்து
சவக்குழிகளிலும்,
திருகப்பட்ட முலைகளோடும்,
நசுக்கப்பட்ட விதைகளோடும்
முழங்காலிட்டு
சொந்த மண்ணிலும்,

குட்டப்பட்டு
தலைகுனிந்த அகதிகளாக
உலகத் தெருவிலும்
ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து
ஏன் எம் நெஞ்சில் இத்தனை நெருப்பு?"

- வ. ஐ. ச. ஜெயபாலன்

உடலெழுத்துவெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.

-சுகிர்தராணி