உடலெழுத்து
வெறுங்கால்களால் கடக்க முடியாத
வெப்ப நாளின் முன்னிரவில்
மதுவருந்த அழைக்கப்பட்டிருந்தேன்
மூவருக்கான அவ்வீட்டில்
நானும் அவளுமே தனித்திருந்தோம்
கண்ணாடியில் செதுக்கப்பட்ட குப்பிகளில்
நொதித்த திரவம் நிரம்பியிருந்தது
குழல் நீண்ட மதுக் கோப்பைகள்
பற்றப்பட வாகாய் காத்திருந்தன
பனித்துண்டங்கள் மிதக்கும் நீரை
மிடறுகளாக விழுங்க ஆரம்பித்தோம்
போதையின் ஒளி
பரவத் தொடங்கிய போது
வேற்றறையின் படுக்கையிலிருந்தேன்
குவிந்த என் மார்பின் மென்மைபற்றி
வெகுநேரம் வினாவெழுப்பிக் கொண்டிருந்த
அவளுடைய தேகமும்
மிகக் குழைவாக இருந்தது
பிறகவள் மூச்சின் வெளிச்சத்தில்
உடலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும்
விடியும் வரை பழகிக் கொண்டிருந்தாள்
நீண்ட யுகங்களுக்குப் பிறகு
அன்று தான்
என்னுடல் என்னிடமிருந்தது.
-சுகிர்தராணி
2 comments:
அடிக்கடி ரகசியமாக வந்து படிச்சிட்டுப்போறேன்..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
படங்கள கொஞ்சம் சென்சார் செய்யுங்களேன்.. நண்பர்களோட படிக்க முடியல.வார்த்தைகள்கூட கொஞ்சம் .தப்பா நெனச்சிக்காதிங்க..
Post a Comment