சிலம்புகள் ஏதுமற்ற அவள்


இதழ்சிதையா செங்கழுநீர் மாலை
மார்பிலே தவழ்ந்திருக்க
வெந்நிறமான அகில்புகை
கூந்தலிலிருந்து மேலெழும்புகிறது

கரும்பும் வல்லியும் வரையப்பட்ட
அகன்ற தோள்கள்
சந்தனப் பூச்சினால் பளபளக்கின்றன.

உயர்ந்த இளங் கொங்கையின்மேல்
மெல்லிய பற்தடங்கள் அமிழ்கின்றன

பொற்கலத்தின் வெண்சாதத்தை
பிசைந்து அவள் ஊட்டுகிறாள்
மெருகேறிய கரும்பாறை முற்றத்தில்
குழந்தைகளிரண்டு விளையாடுகின்றன

தூரத்தில்
காமம் தீர்ந்த ஒருவன்
வனப்பழிந்து வந்து கொண்டிருக்கிறான்

நெருங்கியவன்
சவுக்குப் படலில் கையூன்றி
கண்களால் துழாவ

சிலம்புகள் ஏதுமற்ற அவள்கால்கள்
அவனைச் பரிகசிக்கின்றன

இரட்டைமுலைகள் அதிர
அவள் இதழ்களில் தெறிக்கிறது
ஊழிப்புன்னகை.

-சுகிர்தராணி

1 comments:

said...

ஸ்ஸ்ஸ்ஸ்....வர்ணிப்பு தாங்க முடியல ஜொள்ளு பாண்டி இதை படிச்ச அவ்ளோதான் .

நீங்க இதுல என்னதான் சொல்ல வறீங்க....தயவு பண்ணி இந்த அடியேனுக்கு புரிய வைங்க...
ஸ்ஸ்ஸ்...இப்பவே கண்ண கட்டுதே......