தப்பர்த்தம் கொள்ளாதே புணர்ச்சிக்கு அழைக்கிறேனென்று


“மரந்துளிர்ந்த சாலையோரம்
கைப்பற்றி என் கனவுகேள்.
மனமொடிந்த பொழுதெல்லாம்
திகட்டும் வரை
உன் தோள்கொடு.
விளக்கணைந்த பின்னிரவில்
இமைமீறும் என் கண்ணீரை
சுட்டுவிரலால் துடைத்துவிடு.
மறுதலித்த வாழ்க்கைக்கு
என் பிரதியென
உன்முகம் காட்டு.
இத்தனைக்கும் சம்மதமெனில்
தயவுசெய்து
தப்பர்த்தம் கொள்ளாதே
புணர்ச்சிக்கு
அழைக்கிறேனென்று’’
“வீட்டினில்
வலுவிழந்த கெடுபிடிகள்.
வெளிச்செல்கையில்
பார்வைகள் துரத்தாத நிம்மதி.
சலனத்தைத் தூண்டாத
அந்த மூன்று நாட்கள்.
விளம்பரம்
உள்ளாடைகளின்
அவசியம் புரியாத
அவயவங்கள்.
செளகரியம்தான்
நரையோடியும்
பூப்படையாமல் இருப்பது’’
“இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின் பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
வேடிக்கைப் பார்ப்பதாய்
பாவனை செய்யும் நீ
என்னிடம்
எதை எதிர்பார்க்கிறாய்
காதலையா?’’

உயிர்வாதைக்குப் பிறகு,
“இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணிவிலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என்மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?’’
-சுகிர்தராணி

1 comments:

said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : வருங்கால சினிமா பாடலாசிரியர் யார்!?