நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது


நிலத்தின் மீது சினம் கொண்ட நிலவு
கடலில்
தன்னை மாய்த்துக் கொள்ள
விழுந்தது

அன்னங்கள் தங்கள் அலகுகளில் அள்ளி
நிலவை ஆமையோட்டின் மேல் விட்டது

ஹிட்ச்காக்கின் கழிவறைகளில் கிடந்த
பாம்புகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை

கிரகணங்கள் நிகழாமல் உறைந்துப் போன
காலம்
கிம் கி டுக்கிடம் யாசித்து நிற்கிறது
அவரோ கள்ளக் காதலர்களைப் பிரிப்பது
முடியாத காரியம் என்கிறார்

காலம் திகைத்து நிற்பதைக் கண்ட
சூரியன்
குந்தியையும் கர்ணனையும் நினைத்துப் பார்த்து
கண்ணீர் விட்டது

காதரீன் பிரேயிலி
ஆமைக்கும் நிலவுக்குமான காமத்தை வைத்து
புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதுகிறார்

பாம்புகள் மூன்றாம் உலகப் போரினை அறிவிக்கின்றன

அமெரிக்காவுடனான பாம்புகளின் ஆயுத பேரத்தை மைக்கேல் மூர்
ஆவணப் படமெடுத்து அம்பலப் படுத்துகிறார்

காதல் பயங்கரவாதிகள் தடுப்பு சட்டத்தின் கீழ்
அண்டசராசரத்திலும்
ஆமைகளைக் கண்ட இடத்தில் சுடும்
அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது

கள்ளக் காதல் அடிப்படை மனித உரிமை
என்ற முழக்கத்தை முன்வைத்து
அருந்ததிராயும் நோம் சொம்ஸ்கியும்
போராட்டங்களில் இறங்குகிறார்கள்
ஆனந்த் பட்வர்த்தன் கிராமங்கள் தோறும்
கத்தாரின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க
எதிர்ப்பணியினரின் காட்சிகளை
திரையிடுகிறார்

பாம்புகளின் படை பலம் என்னவோ
வேதாந்தாவும், கோகோ கோலாவும், மேக்டோனால்டுமாய்
நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது
பான் கீ மூன் தலையிட்டும்
யுத்தத்தை தடுக்க முடியவில்லை

ஆமைகள் அழித்தொழிக்கப் படுகின்றன
அன்னங்கள் துரோகத்தின் சின்னங்களாக மாறின
நிலவு வானத்திற்கே துரத்தப்படுகிறது
கிரகணங்கள் நடந்தேருகின்றன

காலத்தின் முள்ளும் நகர்கிறது

நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது

மண் அடுக்குகள்-லீனா மணிமேகலை


மண் அடுக்குகள்


நாளையை பலியிட்டிருந்த
விசித்திரமான வீட்டில் தான்
நான் இறந்திருக்கக் கூடும்

மறுக்கப்பட்டவை விடுபட்டவை
லட்சியங்கள் அபத்தங்கள்
பைசாசங்களாக மாறியதில்
இருளின் நடமாட்டம்
ஒரு நடனம் போல
முற்றத்தில்
காணக் கிடைக்கிறது

சுவர்களில் கீறியிருந்த சித்திரங்களில்
காளைகள் அம்பு உழவு ஏர்
க ங ச ஞ ட ண ர ச ல ழ ள
பைபிள் பருத்தி
எந்திரம் துப்பாக்கி
ஆப்பிள் E=mc2 101011
கணினி பங்கர்கள்
என
எல்லா வடிவங்களையும்
யோனி அச்சில்
வரைந்து வைத்ததால்
ஓவியனின் கண்கள் பறிக்கப்பட்ட கதை
நாட்டார் பாடல்களில்
பாடப்படுவதாக செவிவழிச் செய்தி

ஆண் பெண் அலி
அரசுகளின் பால் அச்சு பொறித்த
ஆடைகளை அணிய மறுத்த
கலைஞர்கள் மேல் ஏவப்பட்ட
சாபங்களும் நிந்தனைகளும்
விலக்கப்பட்ட கனிதரும் மரங்களாக
வளர்ந்திருந்தன
அதன் மகரந்தமற்ற சாம்பல் நிறப் பூக்களை உண்டால்
உலகத்தின் துயர் தீர்க்கும் தத்துவங்களை எழுதிவிடலாம்
என்ற வதந்திகளும் நாடெங்கும் பரவியிருந்தன

நூறாயிரம் ஆண்டுகளாக
அரங்கேறி வரும்
வறுமைச் சடங்குகளில்
கொழுந்துவிட்டெரியும் சாமத்தீயை
முலைப்பால் அணைத்துவிடும்
என்ற வரலாற்றின் சான்றை
நிறுவ முயன்றதாலேயே
படுகொலை செய்யப்பட்டேன்
வட்டெழுத்தில் இருந்த
அந்த ஆவணங்களை
என் குருதி தோய்த்து
இங்கே தான் புதைத்திருக்கிறார்கள்

அர்த்தங்களை உருவாக்குவதும அழிப்பதுமான
போர்களின் கபாலங்கள்
இந்த வீட்டை ஆட்சி செய்வதை
நான் எதிர்த்தேன்
என்னை "புரட்சி"யாளர்களும் எதிர்த்தார்கள்
குறி வளர்ந்த பெண்களும் காட்டிக் கொடுத்தார்கள்

மகள்களைப் புணர்ந்த நிண வாடை வீசும்
இதன் தாழ்வாரங்களில்
கொடுமணல் தாழியைக் கண்டெடுத்திருக்கிறார்கள்
அதில்
சமணி, பமித்தி, கந்தி, கவுந்தி,
கெளத்தி, நக்கன்
பெயர்கள் கிறுக்கப் பட்டிருந்தனவாம்

அவர்களும் இந்த வீட்டில் தான்
இறந்திருக்கக் கூடும்

-லீனா மணிமேகலை

லீனா மணிமேகலையின் புதிய கவிதைகள்




1. வரலாறு


அவள் ஒரு கண்ணாடி


அவளருகே சில கற்கள்

அவள் நேசிக்கும் கற்கள்

அவள் வெறுக்கும் கற்கள்

அவள் முன் பின் அறிந்திராத கற்கள்



2. புள்ளிவிவரம்


ஒவ்வொரு மூன்று நிமிடமும்

ஒவ்வொரு ஐந்து நிமிடமும்

ஒவ்வொரு பத்து நிமிடமும்

ஒரு பெண் மானபங்கம்

ஒரு பெண்

சிசுக்கொலை

ஒரு

பெண்

துன்புறுத்தப்படுதல்



மூன்று எங்கே ஐந்து ஏன் பத்து எப்போது

கைகளுக்கு ஏன் பத்து விரல்கள்

கடந்தேன்

சாலை மிக நீளம்

ஒரு சூயிங் கம்மை விட



கடைக்கார கிழவன் தன் மனைவியை

ஒரு முப்பது நிமிடத்திற்குள் அடித்திருப்பானா

பைக்கில் செல்பவன் தன் வீட்டு சிறுமியின்

முலையைப் பற்றியிருப்பானா

நேற்று

சென்ற வாரம்



கைபேசியில் பத்து கிலோ எடை குறைப்புக்கு

பெண்களுக்குப் பத்து சதவிகிதம் தள்ளுபடி

அறிவிப்பு குறுஞ்செய்தி. எடை குறைத்தால்

ஒவ்வொரு பத்து நிமிடம் என்பது

ஒவ்வொரு பதினைந்து நிமிடம் என்று மாறுமா?

வன்புணர்ச்சிக்கும் எடைக்கும் தொடர்பு உண்டா?



இரண்டு பேருந்துகள் தவற விட்டேன்.

படிக்கட்டில் தொங்கிக் கொண்டு போகும்

இளைஞர்களிடமிருந்து

என் பின்புறத்தைக் காப்பாற்றி கொள்ள வேண்டும்.

என்னருகில் இன்னும் இரண்டு பெண்கள்.

அவர்களுக்கும் பேருந்து ஆண்களிடமிருந்து

தற்காத்து கொள்ள ஏதாவது இருக்கலாம்.

நான்கு, ஆறு, எட்டு

ஒன்பதாம் எண் பேருந்தில் ஏறி விட்டேன்

ஒரு சிறுவன், ஏழு வயதிருக்கும்.

சில வருடங்களில்

அவன் யாரையாவது காதலுக்கு வற்புறுத்தலாம்

இல்லை தன் தங்கையின் பொம்மைகளை

இன்று மாலை உடைக்கலாம்



எண்கள் ஏன் வரிசையாக இல்லை

கடிகாரம் ஏன் வட்டமாக இருக்கிறது



மணி அடிக்கும் போதெல்லாம்

ஒரு திராவகம் ஊற்றப் பட்ட கன்னிமையோ

ரத்தப் பெருக்குத் துணியோ

கொதிக்கும் விந்துவோ

தொடை சூட்டுக் காயமோ

கேஸ் சிலிண்டரோ

நினைவுக்கு வந்து தொலைக்கிறது



என் அம்மாவிடம் கேட்க வேண்டும்.

எருக்கஞ்செடிக்கு தப்பியதால் தான்

என் உடல் நீலமாக இருக்கிறதா என்று

என் எழுத்துக்களும் நீலமாக இருப்பதாகத் தான்

புகார் இருக்கிறது



தொலைக்காட்சி விளம்பரம்

ஒரு சிவந்தப் பெண்ணின் புட்டம்

ஒருவேளை சிவப்பழகு கிரீம் வாங்குவதற்காக

உயிருடன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறேனா



காபி ஆறிக் கொண்டிருக்கிறது

அதில் மிதக்கும் ஆடை

நாளிதழின்

அடையாளம் தெரியாமல் ஆற்றங்கரையில் ஒதுங்கியிருந்த

பெண் பிணத்தின் கலைந்திருந்த ஆடையை ஒத்திருந்தது



பத்தில் ஒரு பெண் எல்லைகளில் கடத்தப் படுகிறாள்

எதிர்ப்படும் பெண்களில் ஒருவரை

நாளை பார்க்க முடியாமல் போய் விடுவேனா

பக்கத்துக்கு வீட்டுக் குழ்ந்தை காணாமல் போய்விடுமா

என்னை யாரவது எண்ணிட்டிருக்கிறார்களா



எனக்கு உனக்கு அவளுக்கு

ஒவ்வொரு பத்து நிமிடமும் ஒவ்வொரு ஐந்து நிமிடமும்

ஒவ்வொரு மூன்று நிமிடமும்



கடந்து செல்லும் ஆண்களின்

சட்டைப் பைகளை சரி பார்க்க வேண்டும்

அதில் நானறிந்த சிறுமியின் வாசனை இருக்கலாம்.

அல்லது ஒரு வன்மையான வார்த்தை

மேலும் ஒரு வயாக்ரா மாத்திரை



யாரையாவது துன்புறுத்தினாயா

சில மணிநேரங்களுக்குள்

சில மாதங்களுக்குள் யாரையாவது காயப்படுத்தினாயா

சில வருடங்களுக்குள்

யாரையாது வன்நுகர்ந்தாயா



கேள்விகள்

தாய்களில், தங்கைகளில், காதலிகளில்

இருக்கும் பெண்களை விடுவிக்கலாம்

சொந்த ஆண்களில் இருக்கும் ஆணைக் கொல்லலாம்

உடனடி காரணமாக அன்பை சொல்லலாம்


அல்லது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணிப் பார்க்கலாம்




3. பசி


இறுதியில்

காவல் அதிகாரி

என் கவிதையைப் பிடித்துக் கொண்டு சென்றார்


விசாரணையின் போது அவர்

கண்களைக் கட்டிக் கொண்டிருந்தார்

ஆடையில்லாத என் கவிதையைக் காண

அவருக்கு அச்சமாக இருந்ததாம்.


குற்றங்கள் விளைவிப்பதே

தன் தலையாயப் பணி என்பதை

என் கவிதை ஒத்துக் கொண்டதால்

அபராதம் அல்லது சிறைத்தண்டனை,

பிணை இல்லையென்று ஆணையிட்ட நீதிபதி

தன் கண்களோடு காதுகளையும் பொத்திக் கொண்டிருந்தார்

என் கவிதை பேசிய சொற்களின் புதிய அர்த்தங்கள்

அவரை திடுக்கிடச் செய்தனவாம்


அபராதம் கட்ட பணம் இல்லாததால்

சிறையிலடைக்கப்பட்ட என் கவிதை

கம்பிகளை மீட்டிக்கொண்டு

சதா பாடல்களை இசைத்தபடியிருந்தது


நாளடைவில் மற்ற கைதிகளும்

ஆடைகளை களைந்தனர்

அவர்கள் பேசத் தொடங்கிய புதிய மொழியால்

அதிகாரிகள் மனம் பிறழ்ந்தனர்


சிறைச்சாலைக்குப் பிடித்த பைத்தியம்

மெல்ல நகரமெங்கும் பரவியது


நிர்வாணம் பெற்ற அந்த நகரத்தில்

அதன்பிறகு

அரசும் இல்லை

குடும்பமும் இல்லை

கலாசாரமும் இல்லை

நாணயங்களும் இல்லை

விற்பனையும் இல்லை

குற்றமும் இல்லை

தண்டனையும் இல்லை



4. வேடிக்கை

நீ உன் சொற்களை

என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்


மலம் மூத்திரம்

கழுவப்படாத கழிப்பறை

அழுகல் அலறல்

செத்த எலி

வீச்சம் நிணம்

ஊசிய மீன்

வலி உதிரம்

கறை இருள்

பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்


என்னிடமும் சொற்கள் இருந்தன


அவர்களிடமும் சொற்கள் இருந்தன

அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை

சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன

கட்டவிழ்ப்பு


நான் லீனா

நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்

ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்

ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்

வாழ்கிறேன்

என் வேலை

என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்

பரப்பியே வைத்திருப்பது


நாடு கோருபவ்ர்கள்

ஜிகாத் தொடுப்பவர்கள்

புரட்சி வேண்டுபவ்ர்கள்

போர் தொடுப்பவர்கள்

ராஜாங்கம் கேட்பவர்கள்

வணிகம் பரப்புபவர்கள்

காவி உடுப்பவர்கள்

கொள்ளையடிப்பவர்கள்

நோய் பிடித்தவர்கள்

எவன் ஒருவனும்

வன்புணர்வதற்கு ஏதுவாய்

யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு

கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள

சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே

அவ்வப்போது

காலக்கெடுவில்

லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை

தூர் வாருவதையும்

படிப்பித்திருக்கிறார்கள்


எனக்கு தெரியும்

அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்

லும்பன் தரகன் மகாராஜா தளபதி

திருடன் கணிப்பொறிக்காரன் போராளி

போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்

கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி

கணவன், தந்தை, சகோதரன், மகன்

எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி

என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது

நிறம் கிடையாது

நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்

வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்

ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்

என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்

யேசு அல்லா இந்திரன் வர்ணன்

சூரியன் கருப்பசாமி அய்யனார்

ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்

யாவும்

கலைக்க முயன்றும்

என் சூலகத்தில்

தங்கிவிட்ட கருக்கள்


அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ

ராக்கெட்டோ கன்னிவெடியோ

எறியப்படும் குண்டுகளுக்கு

உடல் செத்தாலும்

யோனிக்கு சாவில்லை

யோனியிலும் சாவில்லை



2.

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி

அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி

தோழர் என்றெழுதினாய்

உடலை உதறி கொண்டு எழுந்து

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்

என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்

உபரி என யோனி மயிரை விளித்தாய்

உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்

லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்

பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்

முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்

மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்

பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்

இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்

மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்

குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது

சோவியத் உடைந்தது

எழுச்சி என்றாய்

அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து

உப்பை சுவைக்க சொன்னேன்

கோகோ கோலா என்று முனகினாய்

மயக்கம் வர புணர்ந்தேன்

வார்த்தை வறண்ட

வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்

இது கட்டவிழ்ப்பு என்றேன்



-லீனா மணிமேகலை

COCKtail தேவதை!


பிறகொரு நாளின் நள்ளிரவில்
கோப்பை கவிழ்த்த ஆண்டனியின்
குறியை சப்பிக் கொண்டிருந்த பொழுதில்
தேவதையின் யோனியில்
வார்த்தைகள் வழிந்தன.

பரவசத்தின் உச்சத்தில்,
ஆயிரத்தி ஒன்றாம் முறையாய்
கட்டவிழ்த்தலின் சூட்சுமத்தை
காது மடல்களில் ஆண்டனி கிசுகிசுத்தான்.

“விந்து பீச்சட்டும்.
ஆங்கே கமிசார்களை கட்டவிழ்.
யோனி விரியட்டும்.
ஒருங்கே புரட்சியைப் புரட்டு.
மயக்கம் வரப் புணர்.
மார்க்சிய சொல்லாடல் மிக முக்கியம்.
COCKtail-ஆக கலந்து வை.
ஃபூக்கோவின் லேபிளை ஒட்டி விடு.
பிரதியின் சூட்டில்
இலக்கியம் விரைக்கும்.
மெக்கார்த்தி புன்னகைப்பான்.
மாலை விருந்திற்காக கண்ணடிப்பான்.
மீண்டும் வரலாறு முடிவுக்கு வந்திருக்கும்.

புருவத்தை சரி செய்.
புகைப்படமாக எடுத்து வை.
உன்னைச் சுற்றி
இயங்குகிறது உலகம்.
உன்னைச் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.
உன்னைத் தான் சுற்றித் தான்
இயங்குகிறது உலகம்.

உலகின்
அழகிய,
அழகில்லாத,
அழகாய் இருக்க முடியாத,
அழகாய் இருக்க வக்கில்லாத,
அழகாய்ப் பிறக்காத.
அழகாய்ப் பிறக்க முடியாத,
அனைத்துப் பெண்களின் விடுதலையும்,
நீ கட்டவிழ்க்கும் கவிதைகளுக்காகத்தான்
காத்துக் கிடக்கிறது என்பதை அறிவித்து விடு.
கிளாரா ஜெட்கினை விஞ்சிய
பெண் விடுதலைப் போராளியே!
என போஸ்டர் அடிக்க காசு கொடு.
மர்லின் மன்றோ பாவாடையில்
அதனை ஒட்டச் சொல்.

கம்யூனிஸ்டுகளைப் பற்றிக் கவலைப்படாதே,
மிஞ்சிப் போனால்
எழுதப்படும் ஒரு கட்டுரையையும்,
பூதக் கண்ணாடியால் சலிப்பதற்கு
நீதி தேவன்கள் காத்திருக்கிறார்கள்.
கேள்விகளால் துளைத்து விடுவார்கள்.

“இதற்கு ஆதாரம் என்ன? அதற்கு ஆதாரம் என்ன?”
“ஏன் கொச்சை வார்த்தைகள்?”
“நீங்களா இப்படி?”

சட்டம் சட்டம்தான்,
முகத்தில் சிறுநீர் கழித்தாலும்,
கண்ணியவான்கள் வாழும் நாட்டில்
கண்டபடி பேசக் கூடாது.
கண்ணியமாக துடைத்து விட்டு,
கண்ணியமாகத்தான் முறையிட முடியும்.

மார்க்சியம் அவர்களுக்கு முகம்.
தேவதைகளுக்கோ படுக்கை விரிப்பு.
வேண்டும் போது விரிக்கலாம்.
வேண்டாத போது சிறுநீர் கழிக்கலாம்.
தேவதைகளின் சிறுநீர்,
கவிதை.
கம்யூனிஸ்டுகளின் கோபம்,
கொலைக் குற்றம்.

எனவே,
மார்பைக் குலுக்கு.
மயிரை பிய்த்துப் போடு.
போதை கிறக்கத்தில்
COCKtail-ஐ மட்டும் மாற்றி விடாதே…
கட்டவிழ்த்தலுக்கும்
விதிமுறைகள் உண்டு.
பாரத மாதா,
இந்து ராஷ்டிரம்,
பாபர் மசூதி
என எதையும் சேர்த்து விடாதே.
சரஸ்வதியாக சந்தில் நிறுத்தி விடுவார்கள்.”

-லீனா மணிமேகலை

புனைவுகள்


ஒரு மாயக்காரனின் கையுயர்த்தலில்
சடக்கென முகிழ்க்கும் மஞ்சரியாய்
நரம்புகள் புடைத்தயென் கைகளில் குவிகின்றன
என்னைப் பற்றிய புனைகதைகள்
தீ அசையும் ஒளியில்
அசாதரணமாய் புரட்டிப் பார்க்கிறேன்
நீர்த்தாவரங்கள் மல்கிய குளத்தின்
குறுக்கலையென
புனைவுகளில் பரவுகிறதென் பிம்பம்.
பருவ திரவத்தில் தோயாத என்னுடல்
அரும்பி அரும்பிப் பின்பூத்திருந்தது
உடல்கள் கிடத்தப்பட்டிருந்த அறையில்
உறக்கத்தைக் கலைத்த கூடலோசையால்
வேர்விட்டுக் கிளைத்தயென் ரகசிய இரவுகள்
சொல்லப் பட்டிருந்தன
இருளின் அரங்கத்தில்
தானே புணரும் சாகஸநிகழ்வு
ஒற்றைக்காலில் நிறுத்தப்பட்டிருந்தது
காமவாசனை வீசும் தோழியின் தேகத்தில்
இலவம் பஞ்சடைத்த படுக்கையின் வளைவுகளென
புதைந்திருந்தது சுட்டப்பட்டது
புனைவுகள் எப்போதும்
உப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன
அவைதான் வாழ்க்கையை மலர்த்துகின்றன
இந்தக் கவிதையையும்.

- சுகிர்தராணி