நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது


நிலத்தின் மீது சினம் கொண்ட நிலவு
கடலில்
தன்னை மாய்த்துக் கொள்ள
விழுந்தது

அன்னங்கள் தங்கள் அலகுகளில் அள்ளி
நிலவை ஆமையோட்டின் மேல் விட்டது

ஹிட்ச்காக்கின் கழிவறைகளில் கிடந்த
பாம்புகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை

கிரகணங்கள் நிகழாமல் உறைந்துப் போன
காலம்
கிம் கி டுக்கிடம் யாசித்து நிற்கிறது
அவரோ கள்ளக் காதலர்களைப் பிரிப்பது
முடியாத காரியம் என்கிறார்

காலம் திகைத்து நிற்பதைக் கண்ட
சூரியன்
குந்தியையும் கர்ணனையும் நினைத்துப் பார்த்து
கண்ணீர் விட்டது

காதரீன் பிரேயிலி
ஆமைக்கும் நிலவுக்குமான காமத்தை வைத்து
புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதுகிறார்

பாம்புகள் மூன்றாம் உலகப் போரினை அறிவிக்கின்றன

அமெரிக்காவுடனான பாம்புகளின் ஆயுத பேரத்தை மைக்கேல் மூர்
ஆவணப் படமெடுத்து அம்பலப் படுத்துகிறார்

காதல் பயங்கரவாதிகள் தடுப்பு சட்டத்தின் கீழ்
அண்டசராசரத்திலும்
ஆமைகளைக் கண்ட இடத்தில் சுடும்
அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது

கள்ளக் காதல் அடிப்படை மனித உரிமை
என்ற முழக்கத்தை முன்வைத்து
அருந்ததிராயும் நோம் சொம்ஸ்கியும்
போராட்டங்களில் இறங்குகிறார்கள்
ஆனந்த் பட்வர்த்தன் கிராமங்கள் தோறும்
கத்தாரின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க
எதிர்ப்பணியினரின் காட்சிகளை
திரையிடுகிறார்

பாம்புகளின் படை பலம் என்னவோ
வேதாந்தாவும், கோகோ கோலாவும், மேக்டோனால்டுமாய்
நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது
பான் கீ மூன் தலையிட்டும்
யுத்தத்தை தடுக்க முடியவில்லை

ஆமைகள் அழித்தொழிக்கப் படுகின்றன
அன்னங்கள் துரோகத்தின் சின்னங்களாக மாறின
நிலவு வானத்திற்கே துரத்தப்படுகிறது
கிரகணங்கள் நடந்தேருகின்றன

காலத்தின் முள்ளும் நகர்கிறது

நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது

0 comments: