மரணித்தவனின் மிச்சம்

மழைக்காலத்தில் குரலெழுப்பும்
தவளையின் காற்றுப்பையாய்
துயரத்தால் பெருத்திருக்கிறது
மரணித்தவன் வீடு.

வாழ்ந்த பொழுதுகளில்
அவனது கழிவிரக்கமும்
முற்றிய கொடுங்கோன்மையும்
இரத்தமுறைந்த முதுகின் பின்புறம்
அலசப் படுகின்றன.

விதவிமான குரல்களில்
உருகி வழிகின்றன
உயிரின் இழப்புகள்.

அசைவற்றவனின் ஆன்மா
சூடேறிய புகைவளையமாய்
காலவெளிக்குள் பயணிக்கிறது
ஒளிவேகத்தில்.

இறுதி ஊர்வலத்தின்
சிந்திய பூக்களில்
அறுந்து தொங்குகிறது
வாழ்வின் இரகசியம்

உள்ளறையிலிருந்து
கழுவித் தள்ளும்
முற்றத்து நீரில்
தளும்பித் தெறிக்கிறது
மரணித்தவனின் மிச்சம்.
- சுகிர்தராணி

ஒளியை அறுவடை செய்யும் பெண்கள்


நதி கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக்கிடக்க
நிலவை மறைத்து நிற்கும் தாழங்காடு

இருளை முக்காடிட்டு
அரிவாளும் சுரடுமாக நடப்பர்
ஆற்றங்கரைக்கு

பாம்பு தீண்டி இறந்தவளின்
நினைப்பு வந்தாலும்
அல்லாவே என்றபடிதான்
தாழையை இழுத்தறுக்கிறார்

புதர் அசைய அசைய
முள் கீறி நீரில் சிதைந்து கசியும் நிலா
தாழையோடு நிலவை அறுத்துக் கட்டி
தாயைக் காவல் வைத்து
மறைவில் மலம் கழிக்கும் மகள்

இரவுக் காற்றில்
பாம்பென நெளிந்து அசையும் தலையுடன்
வாழ்ந்த கதை இழந்த கதை பேசித்திரும்புகிறார்

சிலர் பறி முடைய
பகலைக் கண்டு அறியாத
மணமாகாப் பெண்கள் நிலவைக் கிழித்து
பாய்பின்னி மஞ்சள் ஒளியை
அறைக்குள் நிரப்பி உறங்குகிறார்
- மாலதிமைத்ரி

காகிதக்கப்பல்


பெரியவர்கள் மயங்கி உறங்கும்
மதியக்கிறக்கவேளையில்
நான் தனியே அனுப்பிய காகிதக்கப்பல்
வழிமறித்த தீவில்
கரையொதுங்கியிருக்கக்கூடும்
நீந்திக் களைப்புற்ற மீன்கள்
அக்கப்பலேறி மறுகரை சென்றிருக்கலாம்
கடற்பரல் அலைக்கழிக்க
சில கணங்களாவது அதன் தலைசுற்றியிருக்கலாம்
திசைமாறிப் போகாது
காற்று தன் கைகளைத் துடுப்பாய் வலித்திருக்கலாம்
வானத்தின் வண்ணம் தூவிய முகத்தைத்
தன் நீரால் கழுவும்
கடலின் மறுகரைக்குச் சென்றிருக்கலாம்
சூரியன் கால் அலம்பும் நேரத்தில்
ஒய்யாரமாய்க் கரைதட்டியிருக்கலாம்

- குட்டி ரேவதி

மௌனத்தின் காரணங்கள்


புரிந்துகொள்ள முயற்சித்தேன்
பலரின் மவுனங்களை.
காரணங்கள் தேடித் தேடி
களைத்து விட்டது
கபாலத்தின்
மண்டை ஓடுகள்.
நட்பு என்றும் காதல் என்றும்
கொள்கை என்றும் தோழமை என்றும்
தமிழன் என்றும் இந்தியன் என்றும்
உறவுகள் என்றும்
உன்னதமாக போற்றிப் புகழப்பட்ட
தருணங்கள்
வெறும் கனவுகள் அல்ல
மீண்டும் மீண்டும்
எத்தனையோ சமாதானங்களை
எடுத்து வைத்து
காத்திருக்கும் போது
பளிச்சென
இருண்டவானத்தில்
இடியுடன் விழுகிறது
எரிதழலாய் மின்னல்
என் முப்பாட்டன்
நந்தனை எரித்த
தீயின் மிச்சமாய்.
பலரின் மவுனங்களுக்கான
காரணங்களைப் புரியவைக்க!.


- புதிய மாதவி,

சனாதன தத்துப்பிள்ளைகளின் நரம்புகள்


கட்டுக் குலையாத
வர்ணக் கொழுப்பில்
மறித்துக் கட்டப்பட்ட சுவர்கள்
நிற்கின்றன கேலிச்சித்திரமாய்

தாமே வேலிகட்டி
இணக்கத்தை மேய்ந்து வந்திருக்கின்றன
ஊருக்குள் வெள்ளாடுகள்

அம்பலப்பட்டது
முப்பிரி நூலைவிடவும் மூர்க்கமானது
சனாதன தத்துப்பிள்ளைகளின் நரம்புகள்

மேனியில் பட்டுவிழுந்த அரசமர நிழல்
தரையை மெழுகுகின்றன கருப்பு ரத்தமாய்

காற்றையும் பிளவுபடுத்த எத்தனித்து எழுப்பிய
மதில்கள், பின்னங்கால் தூக்கிய
நாய்களுக்கு பயன்பட்டதன்றி
வேறொரு.. இல்லை

உறைமாட்டிய கரங்களால்
நீக்கப்பட்ட மின்சாரம்
பன்மடங்காய் கசிந்து பரவுகிறது
சகல நீர்மங்களிலும்

இதுநாள் வரைக்குள் அவர்களின் குறிகள்
புரையோடிய கபாலப் புண்ணிலிருந்த
சீழைத்தான் பிதுக்கி இருக்கின்றன
இனவிருத்திக்கு

பறிமுதல் காலத்திற்கு முன்னதாகத
திருப்பித் தரப்பட்ட அட்டைகளில்
அடையாளப்படுகிறது வந்தேறிகளின் மாற்றுமுகங்கள்

அடிவாரங்களில்,
தோப்புத் துரவுகளில் அடுப்பெரிக்கப்பட
சாம்பல் மேடாய்த் தெரிகிறது மலை!
புகையாய்ச் சூழ்கிறது இருள்!

-தனிக்கொடி

அறுந்த வால்


எனது கனவில் சிறுபூச்சியாய்
சுவரில் ஊர்ந்துகொண்டிருக்கிறாய் நீ
வாய்ப்பிளந்து உன்னை விழுங்க வருகிறேன்
அசைவின் அதிர்வில் சுதாரித்து
அறையளவு புடைத்தெழுந்து
என்னைக் கால்களால் கவ்வியிழுக்கிறாய்
திமிறலின் பலத்தில் எனது இடது மார்பு
பலூனாகப் பெருத்து வெடிக்க
அதிர்ச்சியில் விலகுகிறாய்
உனதருகில் எனது வால் துடித்துக்கொண்டிருக்கிறது

வாலற்ற என்னுடலைத் தேடிக்கொண்டே
உனது உண்டியலில் அறுந்த வால்களை
இன்னும் சேமித்துக்கொண்டிருக்கிறாய்
முளைத்து உன் முன்னே
அசைந்துகொண்டிருப்பது தெரியாமல்

-மாலதிமைத்ரி

நானும் நின் பசியும்


கதிர்உச்சியில் வீழும்
வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது
நம் முதற்காணல்.

அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய்
நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி
என்முன் நீ.

எனதுணவை நினக்களித் தோம்பினேன்
என் காற்றும் நீரும் நீயே கொண்டாய்.
எனது டைமைகள் யாவும்
வழங்கியபின்னும் பசியாறாது

2
என் விந்தின் அடர்சுவையில்
(ஒருவேளை) உனது நாவின் பசியடங்கு மெனும்
நின் மாறா வேண்டலின் பொருட்டு
நான் தன்னின்பத்தில் திளைத்துக் களைத்தேன்.

ஒருப்போதில் பசியின் உக்கிரத்தினூடாக
என் கறியுங்குருதியும் கலந்துண்டாய்
பின்னரென் குருத்தெலும்புகளின் மென்மையை
கலவாய் சுரக்க
விரும்பிச் சுவைக்கலானாய்.

இங்கணமாய்............ இவ்விதமாய்...........
என் ஊனுண்டு உயிர் சுவைத்தாய்.

என்னை யெரியூட்டிய
மூன்றாம் கரிநாளில்
என் சுடலையின் சாம்பலை
வாரிக் கோரித் தின்றபின்னும்
தீராமல் தொடருமுன் பெரும்பசி.

பசிப்பிணியின் ஆயிரமாயிரம் உருக்கொண்டு
நீளுமுன் கைகளில் இட்டுநிரப்ப (ஏதுமின்றி)
இன்னுமின்னும் எனத் தேடியவாறு
சூன்யத்தில் அலைவுறு மென் உயிர்த்துகள்

-மாதங்கி

கோடைத்துயில்


பருவங்களென எப்பொழுதும்
உனது நிகழ்வுகளை

பெய்தும் பொய்த்தும்
பூத்தும் காய்ந்தும்
உறைந்தும் தழுவியும்

எனது உடம்பு
தளும்பியும் நுரைத்தும்
பாய்த்தும் தேங்கியும்
வறண்டும்

எல்லாக் கோடையிலும்
உனது வரவை எதிர்நோக்கி
என் உடம்பில்
முட்டைகளையும் விதைகளையும்
பாதுகாத்தபடி

வசந்தத்தின் முதல் மழைக்கே
மண் நனைந்து
முலைகள் மொட்டவிழந்து விடுகின்றன
மீன் குஞ்சுகள்
உடம்பில் உள்நிரம்பி மொய்க்கின்றன

- மாலதி மைத்ரி

தீப்பற்றி எரியும் நிர்வாணம்

நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ
தற்கொலைக்கு முனையும் பெண்கள்
முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை
மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்
சொந்த உறவுகளால் தற்கொலைபோல்
கொல்லப்படும் பெண்கள்
இதில் விதிவிலக்கு

மரணத்திற்குப் பின்னான
தங்கள் நிர்வாணத்தை நினைத்து
அஞ்சும் அவர்களை
ஆடை ஒருபோதும் காப்பதில்லை
ஏனைய உறவுகளைப் போலவே
அவையும் துரோகம் இழைக்கின்றன

பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை

தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்

- மாலதி மைத்ரி

திரைச்சீலைகள்


வீரகாவியங்களில் பெண்கள் அறைகளுக்கு நடுவே ஆடும்
திரைச்சீலைகளைப் போன்றவர்கள்
இருளும் வெளிச்சமும் இரு முகங்கள்
ஆண்களின் கட்டில்களுக்கு மறைப்பு தருபவை
பல உறவுகளின் சுமையெடுத்து
நரையெய்து எறியப்படுவார்கள்
தரையிறங்கி நடந்து வெளியேற இயலாதவை
கதவுகளைப்போல உரிமை கோருவதில்லை
திரைச்சீலைகள் தாசிகளையொத்தவை
ஆளில்லா அரண்மனையைக்கூட
ஆர்ப்பாட்டமாய் அலங்கரிப்பவை
காலையொளியில் வசீகரமாய் அசைந்து
மாலையில் பருவப்பெண்ணைப்போலக் குதூகலித்து
இரவின் வாயிலில்
துக்கம் அடைத்த தொண்டையுடன் தொங்குபவை
கிசுகிசுப்பையும் அழுகையொலிகளையும் தாங்குபவை
மெத்தென்ற தமது உடலைப்
பஞ்சணைக்கு எப்பொழுதோ விரித்தவை
குஞ்சங்கள் தொங்கச் சலங்கை பூட்டிய பெண்களைப்போல
வாசலோடு பரவசப்பட்டுக்கொள்பவை
விடுதலைக்காய்ப் போராடி
விளக்குத்திரியைப் பற்றி எரிந்துபோனவை
அரண்மனைகள்தாம் திரைச்சீலைகளை வேண்டுகின்றன

- குட்டி ரேவதி

அய்யனாரு சாவதில்லை


முட்ட வந்த கெடாவ
எட்டி உதைக்கப் போன என்னைய
தடுத்துவிட்டு
ஆத்தா சொல்லுச்சி
"கூடாதய்யா அது ஐய்யனாரு"

கூழு ஊத்தின நாளப்போ
அப்புச்சி அதைய வெட்டி போட்டிருச்சி

"ஆத்தா ஐய்யனாரு
செத்துப் போச்சுன்னேன்"

"இல்ல மவராசா
அந்தா பாரு"ன்னு
குங்க மஞ்ச தடவி வச்சுருந்த
கருப்பாயி வீட்டு சேவலுக்கு நேரா
கைய நீட்டிச்சி என் ஆத்தா

-கண்ணன்