தீப்பற்றி எரியும் நிர்வாணம்

நஞ்சருந்தியோ சுருக்கிட்டோ
தற்கொலைக்கு முனையும் பெண்கள்
முன் எச்சரிக்கையுடன் உள்ளாடைகளை
மறக்காமல் அணிந்துக்கொள்கின்றனர்
சொந்த உறவுகளால் தற்கொலைபோல்
கொல்லப்படும் பெண்கள்
இதில் விதிவிலக்கு

மரணத்திற்குப் பின்னான
தங்கள் நிர்வாணத்தை நினைத்து
அஞ்சும் அவர்களை
ஆடை ஒருபோதும் காப்பதில்லை
ஏனைய உறவுகளைப் போலவே
அவையும் துரோகம் இழைக்கின்றன

பிரேதப் பரிதோசனை வளாகத்தில்
சூன்யத்தை வெறித்தபடி கிடக்கிறது
மாண்ட பெண்ணின் சடலம்
காட்சிப்பொருளாய் கடை விரியும்
அழகியப் பெண்ணின் நிர்வாணம்
வக்கிரத்தின் விஷக் கொடி
சுவரெங்கும் படர்கிறது
கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை

தன் உடலுக்குத் தானே எரியூட்டி
மாளும் பெண் நெஞ்சுரத்துடன்
நிர்வாணத்துக்கும் வக்கிரத்துக்கும்
சேர்த்தே எரியூட்டுகிறாள்

- மாலதி மைத்ரி

3 comments:

said...

/////கருத்தப் பச்சையுடன்
பிணவறைக் காப்பாளருக்கு
பொன் முட்டைகளைப் பரிசளிக்கும்
சிறப்பு விருந்தாளியான
நடிகையின் சில்லிட்ட சதை////

:-((((((((((

Anonymous said...

மனதை உலுக்கும் கவிதை.

said...

அப்பப்பா.. யாருங்க இந்த மைதிலி மைத்ரி.. சாட்டையடி கவிதை இது..