சனாதன தத்துப்பிள்ளைகளின் நரம்புகள்
கட்டுக் குலையாத
வர்ணக் கொழுப்பில்
மறித்துக் கட்டப்பட்ட சுவர்கள்
நிற்கின்றன கேலிச்சித்திரமாய்
தாமே வேலிகட்டி
இணக்கத்தை மேய்ந்து வந்திருக்கின்றன
ஊருக்குள் வெள்ளாடுகள்
அம்பலப்பட்டது
முப்பிரி நூலைவிடவும் மூர்க்கமானது
சனாதன தத்துப்பிள்ளைகளின் நரம்புகள்
மேனியில் பட்டுவிழுந்த அரசமர நிழல்
தரையை மெழுகுகின்றன கருப்பு ரத்தமாய்
காற்றையும் பிளவுபடுத்த எத்தனித்து எழுப்பிய
மதில்கள், பின்னங்கால் தூக்கிய
நாய்களுக்கு பயன்பட்டதன்றி
வேறொரு.. இல்லை
உறைமாட்டிய கரங்களால்
நீக்கப்பட்ட மின்சாரம்
பன்மடங்காய் கசிந்து பரவுகிறது
சகல நீர்மங்களிலும்
இதுநாள் வரைக்குள் அவர்களின் குறிகள்
புரையோடிய கபாலப் புண்ணிலிருந்த
சீழைத்தான் பிதுக்கி இருக்கின்றன
இனவிருத்திக்கு
பறிமுதல் காலத்திற்கு முன்னதாகத
திருப்பித் தரப்பட்ட அட்டைகளில்
அடையாளப்படுகிறது வந்தேறிகளின் மாற்றுமுகங்கள்
அடிவாரங்களில்,
தோப்புத் துரவுகளில் அடுப்பெரிக்கப்பட
சாம்பல் மேடாய்த் தெரிகிறது மலை!
புகையாய்ச் சூழ்கிறது இருள்!
-தனிக்கொடி
1 comments:
//பறிமுதல் காலத்திற்கு முன்னதாகத
திருப்பித் தரப்பட்ட அட்டைகளில்
அடையாளப்படுகிறது வந்தேறிகளின் மாற்றுமுகங்கள்//
அந்த முகங்களுக்கு உரியவர்களை சுவற்றுக்கு இந்த பக்கமாக மாற்றி வலி அறிகிறதா என சோதனையிடலாம்.
ஏற்பாடு செய்தவர்களை அடுப்பெரிக்க பயன்படுத்தலாம்.
Post a Comment