குல தெய்வம்


இன்று அதிகாலையின் முதல் கிரணத்தில்
மாலை சூடிய தெய்வங்களாய் நின்றிருந்த
செங்கற்களில் அவளும் ஒருத்தி
அரை நிர்வாணமாய் இடுப்பிற்குக் கீழ்
நிலம் பரவிய சிவப்புப் பட்டும் பின் பெய்த
மழையின் நனைந்த பாவாடையுடன்
அறையின் இறுக்கத்திலிருந்து
புல்வெளிகளின் வழியே சிவப்பு வண்ணாத்தியாய்
வானம் எம்பினாள்
காட்டுக்குள் வெளிக்குச் சென்ற இளம் பெண்ணை
இழுத்து வைத்துப் புணர்ந்தவனை
இரத்தம் கக்கச் செய்தாள்
சிறு சிரிப்பின் ஒலியோடு
காட்டோடு நின்று போனாள்
இரவெல்லாம் காடு சிரிக்கும்
இரட்டை மின்மினிகளாய்
அவள் கண் அலையும்
பெண்களின் உடல் ஒளிய
காட்டின் வெளி என்றாள்
செங்கற்களில் ஒன்றானாள்.

-குட்டி ரேவதி

0 comments: