உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்
இந்த வாழ்க்கை என்னிலிருந்தே உதிக்கிறது
உன் பழுப்பு நிறக்கண்களில் சலம்பும்
பருவவேதனைகளைக் கேட்டிருக்கிறேன்
உன் உடலெங்கும் பயிரான பழுப்புமுடிகள்
எனைத் தம் மென்விரல்களால் வருடுவதை
அனுபவித்திருக்கிறேன்
உலகையே மூழ்கடிக்கும்
சாம்பல்ஒளி உதிர்ந்து
மாலையின் பழுப்புஓளி வாசனை
கிளர்கையில்
என்னுள் நீ மூட்டிய காதலின் அதிர்வும்
என் உடலை வகிரும்
உன் சருமத்தின் பழுப்புக்கதிர்கள்;
அவை உன் தீர்மான அசைவுகளாலும்
அவைமீது விழும் செங்கதிர்களாலும்
ஆனவை
தூக்கத்தில் புரள்பவனைப்போல்
வெற்றுடலால் கதைக்கிறாய்; உன்
புனைவுகளும் கனவுகளும் அசைகின்றன
இந்த வாழ்க்கை
என்னிலிருந்தே உதிக்கிறது
- குட்டி ரேவதி
0 comments:
Post a Comment