தாள்களின் நிர்வாணம்
என் கறுத்த ஆழங்களில்
உன் கசடுகள் படிந்தபின்
உறங்கிப் போகிறாய்
உன் அடியிலிருந்து உருகி
மழுங்கிய அலைகளின் பரப்பில்
தீர்ந்த கதைகளை எழுதுகிறேன்
உரத்த மஞ்சள் நிறத்தில்
எழுத்துகளின் மை ஒளிர்கிறது
முதுகின் கசகசப்பில்
புரண்டு படுத்தவன்
என் மின்னலின் அதீதத்தால்
தாக்குண்டு எழுகிறாய்
இயல்பாய் அத்தியாயங்கள் இடம்மாற
கருமுட்டையிலிருந்து
திருத்தங்கள் ஆரம்பிக்கின்றன
வார்த்தைகளின் முதுகு
ஒடிக்கப்படுகிறது
சொற்களின் அர்த்தங்கள்
பதுக்கப்படுகின்றன
உன் வஞ்சனை நீரால்
பெரும்பள்ளங்கள் நிரம்புகின்றன
ஒருவாறு உன்னமிலங்கள் வடிந்ததும்
எல்லம் அடிக்கோடிட்டு
அழிக்கப் பட்டிருக்கின்றன
குறட்டை ஒலியோடு உறங்கும் உன்னை
ஏளனமாய் பார்க்கிறது
அத்தாள்களின் நிர்வாணம்.
- சுகிர்தராணி
0 comments:
Post a Comment