நுரைத்துப் பொங்கும் காதல்


நீ நிரம்பி வழியும் கடலின்
கரையொதுங்கிய சிறு தாவரமாய்
அலைவுறுகின்றேன்
ஓராயிரம் ஓங்கரிப்புகளுடைய
உன் அன்பின் அடிவாரத்தில்
காலூன்றி களித்திருந்த நாட்களில்
நீ கரைந்த உன்னில்
பருவம் பருவமாய் மூழ்கி
காதலின் முத்துகளைச் சேமிக்கிறேன்
குளிரும் சுழலும் உள்குமைந்து
உன்னை உருமாற்றிய கணத்திலும்
அலை இதழ்களால் என்னை
முத்தமிட்டுச் சென்றிருக்கிறாய்
உன்னையும்
நுரைத்துப் பொங்கும் காதலையும்
இழத்தல் என்பது
ஒப்பீடுகளற்றது என்னும் தருணத்தில்
காலத்தின் நங்கூரம்
என் வேர்களைப் பறிக்கிறது
உன்னிலிருந்து கிளம்பி
உன்னிலேயே பயணித்து
உன் கரையிலேயே ஒதுங்கிய
என் காதலின் பெருவாழ்வு
இன்னொரு முறை வாய்க்கட்டும்

-சுகிர்தராணி

சில கரித்துண்டுகள் !!


வழக்கொழிந்த காட்சியகத்தில்
புழுத்தநெடி வீசும் தாழிஒன்று
அகழ்ந்தெடுக்கப் படுகிறது
கனவுகளைச் சேமித்து வைக்கும்
மனதின் கலயத்தைப் போலிருக்கும்
அதன் உட்சுவரில் கரிய
சித்திரங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன
மாறிய பருவத்தின் போதெல்லாம்
பூக்களைச் சிருஷ்டித்துத் தந்த
விருட்சங்களும்
கள்ளிப் பாலாய் திரண்டிருக்கும்
காட்டுப் பழங்களும்
சர்ப்பத்தின் நீண்டிருக்கும் நாவெனச்
சாட்டையைச் சொடுக்கும் ஆண்களுமாய்
வரையப்பட்டவை பிரமிப்பூட்டும் வேளையில்
உள்ளிருக்கும் உதிர்ந்த எலும்புகளுக்குள்
மின்னுகின்றன சில கரித்துண்டுகள்

-சுகிர்தராணி-

பட்டையுரிந்த காதல்!!


பருவம் கழிந்தொரு விருட்சமாய்
பூத்துக் கொண்டிருக்கிறேன்
அருகம்புற்கள் கிளைத்திருக்கும்
வரப்பின் விளிம்புகளில் நின்று
இருகை நீட்டி அழைக்கிறாய்
மரமாகவே நிற்கிறேன்
காதலின் இனிப்பு திரவம்
உன்னிலிருந்து உருகி வழிந்து
என்னை நனைக்கிறது
அள்ளிப் பருக முடியாமல்
கைகள் புதைந்திருக்கின்றன
சிறு தலையசைப்பின் மூலம்
சில பூக்களை உதிர்த்து
உன் நாட்பட்ட காதலை
ஏற்கலா மெனினும்
காற்றும் பித்துப் பிடித்தாற்போல்
இடம் பெயர்ந்து விட்டிருக்கிறது
யாது செய்வேன்
என் அன்பை யாசித்து யாசித்துக்
கடும்பாலையைக் கடந்து போகிறாய்
திரும்பி வரும்போது புரிந்து கொள்
உன் பெரும்அன்பால் தீய்ந்துபோய்
பட்டையுரிந்து மொட்டைமரமாய் நிற்கும்
என் காதலையும்

-சுகிர்தராணி-

நானும் நின் பசியும்


1
கதிர்உச்சியில் வீழும்
வன்பசிப் பொழு தொன்றில் நிகழ்ந்தது
நம் முதற்காணல்.

அகாலத்தில் நுழைந்த காயசண்டிகையாய்
நூற்றாண்டின் பட்டினிக் கரமேந்தியபடி
என்முன் நீ.

எனதுணவை நினக்களித் தோம்பினேன்
என் காற்றும் நீரும் நீயே கொண்டாய்.
எனது டைமைகள் யாவும்
வழங்கியபின்னும் பசியாறாது

2
என் விந்தின் அடர்சுவையில்
(ஒருவேளை) உனது நாவின் பசியடங்கு மெனும்
நின் மாறா வேண்டலின் பொருட்டு
நான் தன்னின்பத்தில் திளைத்துக் களைத்தேன்.

ஒருப்போதில் பசியின் உக்கிரத்தினூடாக
என் கறியுங்குருதியும் கலந்துண்டாய்
பின்னரென் குருத்தெலும்புகளின் மென்மையை
கலவாய் சுரக்க
விரும்பிச் சுவைக்கலானாய்.

இங்கணமாய்............ இவ்விதமாய்...........
என் ஊனுண்டு உயிர் சுவைத்தாய்.

என்னை யெரியூட்டிய
மூன்றாம் கரிநாளில்
என் சுடலையின் சாம்பலை
வாரிக் கோரித் தின்றபின்னும்
தீராமல் தொடருமுன் பெரும்பசி.

பசிப்பிணியின் ஆயிரமாயிரம் உருக்கொண்டு
நீளுமுன் கைகளில் இட்டுநிரப்ப (ஏதுமின்றி)
இன்னுமின்னும் எனத் தேடியவாறு
சூன்யத்தில் அலைவுறு மென் உயிர்த்துகள்

மாதங்கி

அவள்தான் மலைகளுக்கப்பால் என்னுயிரை வைத்திருக்கிறாளாம் !


ஆத்ம தோழி
புரவியின் மினுமினுப்போடு
என்னை முத்தமிட்டு எழுப்புவாள்

குளிப்பாட்டி என்னுடல் முழுக்க
அலங்காரப் பூச்சிடுவாள்
எங்கிருந்து வருகிறாள்
எங்குபோகிறாள் தெரியவில்லை

அவள்தான் மலைகளுக்கப்பால்
என்னுயிரை வைத்திருக்கிறாளாம்

அப்பள்ளத்தாக்குகளின் முரட்டுச்சுவர்களில்
பட்டுத்திரும்பும் குரல்
என்னுடையதாம்.

மலைப்பயணம் குறித்தான ஆவலை
வெளியிடும் போதெல்லாம்
ஆற்றங்கரை மண்மேடுகளையும்
கிளைகளில் தொங்கும் காற்றையும்
சொல்லித் திசைத் திருப்புவாள்

காலடியில் நழுவும் குழிகளும்
கெட்டித்துப் போன சொற்களும்
என் கேவலை அதிகரிக்கின்றன

தடித்தயென் துக்கம் தாளாது
தொலைவிலிருக்கும் மலைப்பாதையை
அடையாளம் காட்டுகிறாள்

ஒருவேளை
நீங்களிதைப் படித்து முடிக்கும்போது
என்னை நான் அடைந்திருக்கலாம்.

சுகிர்தராணி

பெரும்பாம்பு



கூடலின் பிந்தைய அமைதியை
துடைத்தெறிந்து ஒலிக்கிறது தொலைபேசி

விரல்களால் பற்றி காதோடு இழைக்கிறேன்
அதன் துளைகள் வழியே
பீறிடுகின்றன எண்ணற்ற பாம்புகள்

நொடிப்பொழுதில் சட்டைகளை உரித்துக்
கண்ணியொன்றைப் பின்னுகின்றன
பிளவுப்பட்ட நாக்குகளால்
உறுப்புகளைத் துழாவி ருசிக்கின்றன

என்னுடலெங்கும்
பிசுபிசுப்பான செதில்தடங்கள் பரவ
முட்டையிடவும் குட்டியீனவும்
இடம்தேடித் திரிகின்றன

கலவியுறாத செழித்த பாம்புகள்
என் கருத்த தசைகளின் மேல்
பற்களை அழுத்துகின்றன

விஷத்தில் குளித்த எழுத்துக்கள்
நீலம்பூத்த என் தோலிலிருந்து
நுரைத்துப் பொங்க

எல்லாப் பாம்புகளையும் விழுங்குகின்றேன்
நானே பெரும்பாம்பாகி.

-சுகிர்தராணி

மணப்பெண்


மாலை நேரக்காற்று
முன்னிற்க
மணநாளில் பவ்யமாய்
விடை பெறுகிறாள்
மணப்பெண்

அவளது பர்தாவுக்குள்
முகம் புதைத்தபடி
மலர்களின் வாசனையோடிணைந்த
புணர்ச்சியைப் போதிக்கிறாள்
தமக்கை.

தானே அறிந்திராத
தடித்த புத்தகத்தின் பக்கங்களை
துரிதகதியில் புரட்டுகிறாள்
எந்த நாளில் புணர்ந்து
கருவைத் தள்ளிவைக்கலாம் எனவும்
ஹராமாக்கப்பட்டதெனவும்*
கூடவே
புணர்ச்சிக்குப் பிந்தைய
சுத்த பத்தங்களையும்

தன் குள்ள உருவத்திற்கேற்ற
குற்றக் கண்களில் குறுக்கிடுகிற
வாழ்வின் சுகவீனங்களையும்
நைந்து போன புணர்ச்சியின்
வெற்றுச் சூத்திரங்களையும்
தனக்குள்ளாக ஒளித்தபடி

அவ்வப்போது
வெட்கத்தில் துவண்டு
விழுகிற வார்த்தைகளை
சிறுமியின் அசட்டுத் தன்னம்பிக்கையுடன்
துடிப்போடு கடிவாளமிட்டபடி

தன் காதுத் தொங்கட்டானில்
சிக்கி மடங்கிய ஆலோசனைகளை
நீவி எடுத்து

அன்றைய முழு இரவுக்குமாக
படுக்கையில் படர்த்துகிறாள்
புது மணப்பெண்

-சல்மா.