போருக்குத் தயாராகிறேன் !


மீன்கள் புரளும் கழிமுகத்தைப் போல்
குறுவாள்கள் நிறைந்திருக்கின்றன
என் பாசறையில்
இரத்தம் பார்க்கக் காத்திருக்கும்
பசித்த புலியின் பற்களென
ஒன்றையொன்று குத்தி
வெறியேற்றிக்கொள்கின்றன
கற்களும் உலோகங்களும்
உரசிக்கொள்ளும் அச்சத்தம்
ருசி கொண்ட பேரொலியை ஒத்திருக்கின்றது
தசைப் பிசிறு உலர்ந்த வாள்களின்
கண்ணீர்க் கதைகள்
ஏதேன் நதிநீரால் கழுவப்படுகின்றன
என்னுடலைக் கீறிக் கீறி
ஒவ்வொன்றாய்ச் சோதனையிடுகிறேன்
அவற்றின் கூர்மை
பிஞ்சுப் பெண்ணொருத்தியின்
முளைத்த மார்புபோலத்
திருப்தியூட்டுகிறது
தூரத்தில் தீவட்டி ஏந்திய
மனிதர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்
போருக்குத் தயாராகிறேன்
குறுவாள் ஒன்றை
யோனிக்குள் மறைத்துக்கொண்டு..

-சுகிர்தராணி

2 comments:

Anonymous said...

எரியும் தழல்...

said...

நன்றாக இருக்குதுங்க... கவிதை!