பதினான்கு அம்புகள்


பச்சைக் கள்ளியின் பழநிறத்தில்

கனன்று எரிகிறது தீ

அடர்வனத்தின் மர்மப் புன்னகை

பெருங்காற்றாய்ச் சூழ்ந்து நிற்க

மிகுந்த குலவைச் சத்தங்களும்

துந்துபிகளின் பேரொலியும்

நீராவியைப் போல பரவி மிதக்கின்றன

கடல் சூழ்ந்த நிலத்திலிருந்து

மீட்டுக் கொணர்ந்த என்னை

நெருப்பின் விளிம்பில் நிறுத்துகிறார்கள்

பூக்களால்அலங்கரிக்கப்பட்ட சிவிகையும்

மென்மையாக்கப்பட்ட பாதக் குறடுகளும்

எனக்காகக் காத்திருக்கின்றன

தீயிலிறங்கிக் கரையேறச் சொல்லும்

வில்லேந்திய அவனிடம்

என்னைச் சிறையிட்டவனோடு

செம்மரக் கட்டிலில் சயனித்ததை

இதழ்பிரித்து விளம்புகின்றேன்

காப்புடைத்த என் யோனியிலிருந்து

வெளியேறுகின்றன பதினான்கு அம்புகளும்

பெருந்தீயை அணைக்கப் போதுமான

ஒரு குவளை இரத்தமும்.


-சுகிர்த ராணி

0 comments: