எனக்குள்ளிருக்கும் காடு


அந்தியில் ஆழ் மனதிற்குள்
வடக்கு நோக்கியே அந்த
மலை படுக்கிறது
அதன் பாதத்தின் விரல்களில்

மழைக்கால மரங்கள்
அசைந்துகொண்டேயிருப்பதால்
தூக்கமேயில்லை
கால்களின் நரம்புகளாய்

காட்டுக் கொடிகள் பற்றிக் கிடப்பதை
ஓயாமல் பேசித் திரியும் எனது
நரம்புகளுக்குள் ரத்தம் பச்சை நிறமாகிப்
போனது யாருக்குமே தெரியாது
இதற்கான பிரார்த்தனையைக் கூட

முழங்கால்களுக்கிடையே சிக்கிக்
கிடக்கும் பாறையில் அமர்ந்துதான்
பேசிக்கொள்கிறேன்
பறவைகள் அந்தி உணர்வது போல்

அந்நேரம் இருள் அரும்புகையில்
புல்மேடுகளில் பனித் துளிகள்
நடுங்குகின்றன
லீலிப்பூ இடை நீரோடையில்

எதையோ தேடுகிறேன்
கரையெங்கும் கூழாங்கற்கள்

உதடுகளாய் சிதறிக் கிடக்கின்றன
அந்த உதடுகளை
அள்ளிச் சுவைத்து முத்தமிட்டுக்
குளிக்கிறேன்
தனிமையைத் தந்துவிட்டுப்

போனவனின் உதடு போல
அல்ல
அவை உறைந்த காலக் குளிர்
அவற்றில் முகம் வைத்து

மரங்களடர்ந்த மார்பில் சாய்ந்து
முத்தமிட்டவாறே தூங்க நினைக்கிறேன்
கிழக்கு நோக்கிப் படுக்கிறது

அந்த மலை

-ரோஸ்லீன்

1 comments:

said...

அன்புள்ள அனைவருக்கும் போஸ்ட் எ கமெண்ட்டின் கலரை மாற்றுவது எப்படி என்பதை யாரும் சொல்ல முடியுமா என் பதிவில் பாருங்கள் பார்த்தால் சரியாக தெரிவதில்லை அதன் கலரை மாற்ற யாரும் உதவுங்களேன் மற்றவற்றை தமிழில் மாற்றும் போது இதுமட்டும் மாறவில்லை காரணம் கூறினால் மகிழ்வேன்